Friday, January 24, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் 4 வருடம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் 4 வருடம்

சர்வதேசத்தில் இலங்கையின் நன்மதிப்பை, கடுமையாக பாதித்த ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் துயரச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

எனினும், இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் மற்றும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என வத்திக்கான் முதல் சர்வதேசம் வரையில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த 2019 ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி காலை வேளையில், கிறிஸ்தவ மக்கள் வழமையான உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளுக்காக, தேவாலயங்களில் ஒன்றுகூடியிருந்தனர்.

இதன்போது, காலை 8.45 அளவில், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியனவற்றில், ஒரே நேரத்தில், தற்கொலைக் குண்டுதாரிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.

அதேநேரம், கொழும்பின் முன்னணி விருந்தகங்களான ஷெங்ரிலா, கிங்ஸ்பெரி மற்றும் சினமன் லேக்சைட் உள்ளிட்ட விருந்தகங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

குறிப்பிட்ட நேரத்துக்குள், இந்தத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

500 பேர் வரையில் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் இலங்கையில் மாத்திரமல்லாமல், சர்வதேசத்திலும், பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இலங்கையின் நன்மதிப்பை கடுமையாக பாதிக்கும் சம்பவமாகவும் மாறியது.

எனினும், இன்றுவரை இந்தத் தாக்குதல்களுக்கு மூல காரணம் யார் என்பது, விசாரணைகளில் கண்டறியப்படவில்லை.

உள்நாட்டில், கத்தோலிக்க சபை, இந்த விடயத்தில் நீதி கோரி, சர்வதேசத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.

எனினும், அரசாங்கம், விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறுவதாக பதிலளித்து வருகிறது.

இந்த நிலையில், இலங்கையின் இனப்பிரச்சினை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, நில அபகரிப்பு, குடிப்பரம்பல் மாற்றங்கள், 200 வருடங்களாக நிலமற்று இருக்கும் மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகள் உட்பட பிரச்சினைகளுக்கு, தீர்வுகள் காணப்படாத நிலைமையே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திலும் தொடர்கிறது.

இந்த விடயம், உள்நாட்டு விசாரணையில் இருந்து, கைமீறி, சர்வதேசத்திற்கு சென்றிருந்தாலும் கூட, இலங்கையின் பூகோள அரசியல் அடிப்படையில், எவ்வாறான தீர்வு கிடைக்கப்போகின்றது? என்பதே பாதிக்கப்பட்டோரின் எதிர்பார்ப்பாக தொடர்ந்தும் உள்ளது.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கு நீதிக்கோரி, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலிருந்து கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம் வரை மக்கள் தொடர் அஞ்சலி நிகழ்வுகளில் ஈடுபடவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular