Friday, January 24, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஒலிபரப்பு நிலையம் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்!

ஒலிபரப்பு நிலையம் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்!

மாகாணக் கல்வித் திணைக்களத்தின் நிர்வாகம் மிகவும் பலவீனமடைந்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் தமது தமக்குரிய சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் மிகவும் சிரமப்பட்டு வருவதுடன், புதிய மாகாணக் கல்விப் பணிப்பாளர் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட ஐ.ம.ச பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே இவர் இதனை தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் தொடர்ந்தும் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்,

“சில கடிதங்களுக்கு ஒப்பமிட உரிய உத்தியோகத்தர்கள் இல்லை என்ற காரணம் காட்டி கிடப்பில் போடப்பட்டுள்ளது. பரீட்சைக் கடமை முடிந்து வந்த பின்னர் தான் ஒப்பம் பெற முடியும் என விடயத்திற்குப் பொறுப்பானவர்கள் கூறுவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பரீட்சை ஒரு மாதமாக நடக்கின்றது. இதிலிருந்து தாமதத்தின் அளவைக் கணக்கிட்டுக் கொள்ள முடியும்.

எனவே, நிர்வாகத்திற்குப் பொறுப்பானவருக்கு பரீட்சைக் கடமைகள் வழங்கக் கூடாது அல்லது அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மாகாணக் கல்விப் பணிப்பாளர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் கும்புறுபிட்டியில் அமைந்துள்ள உப ஒலிபரப்பு நிலையம் முன்னர் ஜேர்மன் வானொலிக்கு சொந்தமாக இருந்தது. தற்போது அது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உப நிலையமாக செயற்படுகின்றது.

தற்போது இந்த வானொலி உப ஒலிபரப்பு நிலையத்தினூடாக உள்ளுர் நிகழ்ச்சிகள் எதுவும் ஒலிபரப்பப் படுவதில்லை. வெளிநாட்டு ஒலிபரப்பு ஒன்றுக்காக மட்டும் இந்த நிலையம் பயன்படுத்தப்படுகின்றது. அதுவும் மாலை வேளையில் மட்டும் இந்த ஒலிபரப்பு இடம்பெறுகின்றது. இதற்காக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் வாடகை பெறப்படுகின்றது. ஏனைய நேரங்களில் இந்த நிலையம் எவ்வித செயற்பாடும் இன்றி இருக்கின்றது.

இம்மாவட்டத்தில் உள்ள பெறுமதி மிக்க வளம் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பது கவலைக்குரியது.

எனவே, இந்த ஒலிபரப்பு நிலையம் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இப்பகுதி கலை பண்பாட்டு நிகழ்வுகளை ஒலிபரப்ப முக்கியத்துவம் கொடுக்கப்படலாம். உள்ளுர் செய்திகள் ஒலிபரப்ப வாய்ப்புகள் வழங்கப்படலாம். அறிவு சார்ந்த நிகழ்வுகள், மாணவர் நிகழ்வுகள் எனப் பல்வேறு நிகழ்வுகளுக்கு முக்கியத்தவம் கொடுக்கப்படலாம். இதன் மூலம் மக்கள் மத்தியில் இந்த ஒலிபரப்பு நிலையம் பிரபலமடைந்து விளம்பரங்கள் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம். குறிப்பிட்டளவு வேலைவாய்ப்பையும் உருவாக்கலாம்.

எனவே, இப்பகுதி முக்கியஸ்தர்களையும் உள்ளடக்கிய குழு ஒன்றை நியமித்து பரிந்துரைகளைப் பெற்று இதனை அபிவிருத்தி செய்ய வேண்டும். இது தொடர்பான கோரிக்கையை நமது இந்த அபிவிருத்திக்குழு ஊடகத்துறை அமைச்சருக்கு முன் வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய பாராளுமன்ற உறுப்பினர், கிண்ணியா நகரசபைப் பகுதியின் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஈச்சந்தீவாகும். விவசாயக் குடும்பங்களே இங்கு அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. தென்னை போன்ற வான் பயிர்களை யானைகள் சேதப்படுத்தகின்றன. யானைகளால் வீடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன. இதனால் இம்மக்கள் இரவு வேளைகளில் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். இந்த விடயம் கிண்ணியா பிரதேச செயலாளருக்கு நன்கு தெரியும்.

எனவே, காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த இப்பகுதியில் யானை வேலி அமைக்கப்பட வேண்டும். சுமார் 2 கிலோமீற்றர் நீளமுள்ள யானை வேலி போதுமானதென இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இது குறித்து கவனம் செலுத்தி ஈச்சந்தீவுக் கிராமத்தில் யானை வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலாவது அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular