Sponsored Advertisement
HomeLocal Newsகணவனை பழிவாங்க குழந்தையை கொல்ல முயன்ற தாய்

கணவனை பழிவாங்க குழந்தையை கொல்ல முயன்ற தாய்

கணவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து, அவரை பழிவாங்குவதற்காக ஒன்றரை வயதான தமது குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளியதாக கூறப்படும் தாயொருவரை கைதுசெய்துள்ளதாக உடப்பு  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடப்பு, கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவியே, தமது ஒன்றரை வயதான பெண் குழந்தையை இறால் வளர்க்கப்படும் தொட்டியில் தள்ளியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென காவல்துறையினர் கூறுகின்றனர்.

குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளியதாக கூறப்படும் குறித்த பெண், எதுவும் தெரியாததைப் போல குழந்தையை தேடியுள்ளார்.

எவ்வாறாயினும்,  குழந்தை தள்ளிவிடப்பட்டதை அவதானித்த ​​அதே இறால் பண்ணையில் பணிபுரியும் மற்றுமொரு தொழிலாளி, அதில் குதித்து அந்த குழந்தையை காப்பாற்றியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்  அங்கிருந்து குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குருணாகல் போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சந்தேகநபரான பெண்ணுக்கு தமது கணவருடன் சில காலமாக குடும்பத் தகராறு நிலவிவந்தமை காவல்துறை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் கொபேகனே பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் குடும்ப தகராறு தொடர்பில் கொபேகனே காவல்நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இருவரும் குழந்தையுடன் தகராறின்றி வாழுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், குறித்த பெண் தனது கணவனுடனும் குழந்தையுடனும் கட்டகடுவ இறால் பண்ணையில் உள்ள தங்குமிடம் ஒன்றில் வசித்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கணவனை பழிவாங்குவதற்காக குழந்தையை இறால் தொட்டியில் தள்ளியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேநபரான 20 வயதுடைய தாயை உடப்பு காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், அவரை புத்தளம் நீதிமன்றம்  முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

Exit mobile version