Friday, December 13, 2024
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை

கனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

35 வயதுடைய தர்ஷனி ஏகநாயக்க என்ற தாயையும் அவரது ஏழு வயதான மகன், நான்கு மற்றும் இரண்டு வயது மற்றும் இரண்டு மாதங்களேயான அவரது நான்கு பிள்ளைகளும் கொல்லப்பட்டனர்.

சம்பவத்தில் குறித்த பிள்ளைகளின் தந்தை பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய காமினி அமரகோன் என்ற அவர்களது நண்பர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

கூரிய ஆயுதத்தினால் இந்தக் கொலைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த வீட்டிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் உயிரிழந்த குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இது தொடர்பான அடுத்த வழக்கு எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் அன்றைய தினம் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஒட்டாவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குருணாகல் – பொல்கஹவெல பகுதியில் வசித்து வந்திருந்த இவர்கள் சுமார் 6 மாதங்களுக்கு முன்னரே கனடாவுக்கு சென்றுள்ளதாக உயிரிழந்த தர்ஷனி ஏகநாயக்கவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் ஒட்டாவா நகர வரலாற்றில் பதிவாக மிகவும் மோசமான படுகொலை எனவும் குறித்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்தவிடயம் தொடர்பில், எமது செய்திச் சேவை கனடாவின் ஒட்டாவாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் அன்சுல் ஜானை தொடர்பு கொண்டு வினவியது, அதற்கு பதிலளித்த அவர், இவ்வாறான சம்பவமொன்று இதற்கு முன்னதாக இடம்பெறவில்லை எனவும், இலங்கையைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவர் ஒருவர் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை வருத்தத்திற்குரிதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்துடன் இணைந்து இருந்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள், தேவையேற்படின் நாட்டுக்கு கொண்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

அதற்கான செலவீனங்கள் தொடர்பில் எந்தவொரு தீர்மானங்களும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் சடலங்கள் கிடைக்கப்பெறும் தினம் தொடர்பில் எந்தவொரு அறிவிப்பும் எமக்கு கிடைக்கபெறவில்லை என கனடாவின் ஒட்டாவாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் அன்சுல் ஜான் தெரிவித்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular