இலங்கையில் முதன்முறையாக சுகாதாரத்துறைக்கு மின்சார முச்சக்கரவண்டிகளை வழங்கும் திட்டத்தின் முதல் கட்ட வேலைத்திட்டம் பதுளை மாவட்டத்தில் உள்ள 16 வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (21) பதுளையில், பெருந்தோட்ட அமைச்சர் மற்றும் சமூக உள்கட்டமைப்பு திரு. சமந்தா வித்யாரத்ன தலைமையில் இடம்பெற்றது.
ஊவா மாகாண சுகாதார அமைச்சின் தலையீட்டில் உலக வங்கியின் உதவியுடன் ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் டேவிட் பீரிஸ் நிறுவனத்தின் ஊடாக சுமார் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான மின்சார முச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த முச்சக்கர வண்டிகள் அந்தந்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் களப் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த முச்சக்கர வண்டிகளை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் திரு.சமந்த வித்யாரத்ன, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையின் அடிப்படையில் செலவீனங்களைக் குறைக்க அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாடுகள் மற்றும் சேவைத் தேவைகளுக்கு மின்சாரக் கார்களைப் பயன்படுத்துவது முக்கியமான தீர்மானமாகும் என குறிப்பிட்டார்.
அத்துடன் கடந்த காலங்களில் அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் விலையுயர்ந்த சொகுசு வாகனங்களை பயன்படுத்திய போதும் தமது அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலரும் அந்த வாகனங்களை ஏற்றுக்கொள்ளாது சாதாரண வாகனங்களையே பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டினார்.
சம்பந்தப்பட்ட சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தினிந்து சமன் ஹென்நாயக்க, ஊவா மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர்.எம். தயானந்தா மற்றும் சுகாதார அதிகாரிகள் மற்றும் டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.