Thursday, December 26, 2024
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsதெற்காசியாவின் அடையாளமாக இலங்கை மாறவேண்டும்!

தெற்காசியாவின் அடையாளமாக இலங்கை மாறவேண்டும்!

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இலங்கை நாடானது எதிர்காலத்தில் தெற்காசியாவின் அடையாளமாக மாற்றமடையும் என்று ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் குருநாகல் நகரில் தொழில் முனைவோர் சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது கௌரவ ஆளுனர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள்,
2022ம் ஆண்டு இலங்கை பாரிய பொருளாதாரநெருக்கடியை எதிர்கொண்ட போது இனி எந்த ஒரு காலத்திலும் பொருளாதார ரீதியாக இலங்கை தலை தூக்கவே முடியாது என்று பெரும்பான்மையான சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் எதிர்வு கூறினார்கள். ஆனால் அந்த எதிர்வுகூறல்களை சில மாதங்களுக்குள்ளாகவே அடித்து நொறுக்கிவிட்டு மீண்டும் வலுவான பொருளாதார வளர்ச்சியை நோக்கி இலங்கை உறுதியான நடை போடத் தொடங்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் செயற்பாடு ஒருபோதும் சாத்தியமாகாது என்று அப்பொழுது பலரும் பேசினார்கள். ஆனால் இரண்டே ஆண்டுகளுக்கு பிறகு உலக வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய சாதனையாக வியந்து பேசப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டுக்கு வழங்கிய தலைமைத்துவம் ஒரு சாதாரண விஷயம் அல்ல. உலகில் இலங்கையின் இடத்தை தக்கவைத்துக்கொள்வதில் பாரிய சவால்களை எதிர்கொண்டு ஈட்டிக்கொள்ளப்பட்ட மிகப்பெரும் சாதனையாகும் .

ஒருபுறம் பொருளாதார வளர்ச்சி, மறுபுறத்தில் கடன் தொகை தள்ளுபடி என சர்வதேசத்திலும், ஜனநாயகம், நாட்டின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தி நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கட்டியெழுப்புதல் என உள்நாட்டிலும் அவர் பாரிய சாதனைகளை ஆற்றியுள்ளார். இரண்டே வருடங்கள் அளவிலான குறுகிய காலத்துக்குள்ளான அவரது சாதனைகள் முழு உலகையும் வியக்க வைத்துள்ளது.

இதன் மூலம் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இலங்கையானது எந்தவொரு கட்டத்திலும், எவ்வாறான சவால்களையும் தாக்குப்பிடித்து சரித்திரத்தில் சாதனைமிகு வெற்றிகளைப் பதிவு செய்யும் வல்லமை கொண்டது என்பதை நாங்கள் வலுவான முறையில் சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

அது சாதாரணமான ஒரு விடயமல்ல, மிகப்பெரும் செய்தியை உலகுக்கு உணர்த்தியுள்ளது. இலங்கை இனி தெற்காசியாவின் ஒரு சாதாரண நாடு மட்டும் அல்ல, நவீன தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நாடு, சர்வதேச மட்டத்தில் சவால்களை எதிர்த்து வெற்றி கொண்டு தெற்காசியாவின் வரலாற்றை திருத்தி எழுதப்போகும் நாடு என்பதை உணர்த்தியுள்ளோம்.

2022 ஆண்டு வீழ்ச்சியடைந்திருந்த இலங்கைக்கான சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. சர்வதேச ரீதியில் நாம் பெற்றுக் கொண்டுள்ள நம்பகத்தன்மை கொண்ட வளர்ச்சியே அதன் காரணமாகும்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை ஊடாக வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமன்றி, நம் நாட்டைப் பற்றிய சர்வதேச மட்டத்திலான பிம்பத்திலும் ஒரு மதிப்பு அதிகரித்துள்ளது. இந்த பொதுவான சாதனையின் பின்னால் நாடும் பொருளாதார ரீதியாக துரிதமாக மீட்சி பெற்றது.

தற்போதைய நிலையில் இலங்கையின் ஒவ்வொரு அசைவுகளும் உலகை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டு இருக்கிறது. எதிர்காலத்தில் தெற்காசியாவின் தலைமைத்துவத்திற்குத் தகுதியான நாடாக, சர்வதேச மட்டத்தில் தெற்காசியாவின் அடையாளமாக இலங்கை திகழ வேண்டும். அதற்கான தகுதியான தலைமைத்துவத்தினை ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே வழங்க முடியும் என்றும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் வடமேல் மாகாண தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் முன்னணி வர்த்தகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular