நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசம்!

100 views

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றின் தரம், உணர்திறன் மிக்க குழுக்களுக்கு (sensitive groups) ஆரோக்கியமற்ற மட்டத்தை எட்டியுள்ளது. 

எனவே சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.