கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த சமயம் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் இன்று மாலை புத்தளம் மாம்புரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கட்டிட நிர்மாணப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே குறித்த இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக புத்தளம் தல வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் எமது ஊடகத்திற்கு தெரிவித்தார்.
மின்சாரம் தாக்கப்பட்டு புத்தளம் தல வைத்தியசாலைக்கு கொண்டுவரும் முன்னரே மின்சார தாக்கத்திற்கு உள்ளான மூவரும் உயிரிழந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த விபத்தில் 29,22 மற்றும் 19 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளதாகவும், மின்சார தாக்கத்திற்கு உள்ளான மேலும் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் புத்தளம் தல வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
குறித்த விபத்தில் புத்தளம் சோல்ட்டன் பகுதியை சேர்ந்த இருவரும், புத்தளம் மதீனா நகரைச் சேர்ந்த ஒருவருமே மேற்படி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் புத்தளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.