ரமழான் மற்றும் யூதர்களின் பாஸ்ஓவர் பண்டிகை காலங்களை முன்னிட்டு, தற்போது அமுலில் உள்ள போர்நிறுத்தத்தை, ஆறு வாரங்களுக்கு தற்காலிகமாக நீடிப்பதற்கு இஸ்ரேல் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முன்னதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தின் முதல் கட்டம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது.
நிறைவடைந்த சிறிது நேரத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டது.
இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்பின் விசேட பிரதிநிதியினால் சமர்ப்பிக்கப்பட்ட போர் நிறுத்த திட்டத்தின் கீழ், காசாவில் ஹமாசினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயகைதிகளில் 50 சத வீதமானவர்கள் முதல் நாளிலேயே விடுவிக்கப்படுவார்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது
இருப்பினும், நிரந்தர போர் நிறுத்தம் குறித்து ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டால் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய காலத்தில், இஸ்ரேலிய நடவடிக்கைகள் குறித்து ஹமாஸ் பகிரங்கமாக எந்த கருத்தினையும் தெரிவிப்பதில்லை.
பிரதமர் நெத்தன்யாகுவினால் அழைப்பு விடுக்கப்பட்டு நான்கு மணி நேரம் நடந்த கூட்டத்தின் பின்னரே, இஸ்ரேலிய அரசாங்கம் போர் நிறுத்த நீடிப்பை ஆதரித்தது.
எனினும் அமெரிக்க விசேட பிரதிநிதியினால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.
ஹமாஸ் தனது நிலைப்பாட்டை மாற்றினால் இஸ்ரேல் உடனடியாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீன அதிகார சபை உட்பட ஏனைய பாலஸ்தீனிய நிர்வாக கட்டமைப்புக்களை கையளிக்க தயாராகவுள்ள போதிலும், காசாவில் ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக இருப்பதில் ஹமாஸ் உறுதியாக உள்ளதாக கருதப்படுகிறது.