மோசடி குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் வங்கதேச கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன் சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி., ஷகிப் அல் ஹசன். அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். கடந்த ஆண்டு மாணவர் தலைமையிலான கிளர்ச்சியின் போது, கனடாவில் இருந்தவர், மீண்டும் வங்கதேசம் செல்லவில்லை.
இதற்கிடையே, கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி ஐ.ஐ.எப்.சி., வங்கியின் சார்பாக ஷகிப் அல் ஹசன் உள்பட 4 பேரின் மீது ரூ.3 கோடி அளவிலான செக் மோசடியில் ஈடுபட்டதாக வங்கதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகாததினால் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது.
தற்போது அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடது கை ஆல்ரவுண்டரான இவர் வங்கதேச அணிக்காக 71 டெஸ்ட், 247 ஒருநாள் போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் சிறப்பாக ஆடி, மொத்தம் 712 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.