ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி (TSunami) தாக்கியது
இதன் காரணமாக 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்து கடற்கரையில் மோதியது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்தன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பல பசிபிக் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தூரக் கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் புதன்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4 மீட்டர் (13 அடி) உயரம் வரை சுனாமி அலைகளை உருவாக்கியது. இதனால் அப்பகுதி மற்றும் ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பசிபிக் முழுவதும் ஜப்பான், அமெரிக்கா மற்றும் பல தீவு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இதுவரை பெரிய காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின்படி, சுனாமி ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு தீவான ஹோக்கைடோவின் கடலோரப் பகுதிகளையும் தாக்கியது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, இந்த நிலநடுக்கம் 19.3 கிலோமீட்டர் (12 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதன் மையப்பகுதி அவச்சா விரிகுடாவில் அமைந்துள்ள சுமார் 1,65,000 மக்கள்தொகை கொண்ட கடலோர நகரமான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சட்காவிலிருந்து கிழக்கே தென் கிழக்கே சுமார் 125 கிலோமீட்டர் (80 மைல்) தொலைவில் இருந்தது. முதலில் நிலநடுக்கத்தின் அளவு 8.0 ஆக இருந்தது, பின்னர் 8.8 ஆக USGS மாற்றியது.
இந்த சுனாமியின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கம்சட்கா பிராந்தியத்தின் சில பகுதிகளில் 3 முதல் 4 மீட்டர் உயரமுள்ள சுனாமி அலைகள் பதிவாகியுள்ளதாக ரஷ்யாவின் அவசரநிலை அமைச்சர் தெரிவித்தார். “அனைவரும் நீர்நிலைகளில் இருந்து வெளியேற வேண்டும்” என்று அமைச்சர் லெபெடேவ் கேட்டுக்கொண்டார். அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு அபாயகரமான சுனாமி அலைகள் மூன்று மணி நேரத்திற்குள் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தது.
ரஷ்யாவின் பசிபிக் கடற்கரை மற்றும் வடமேற்கு ஹவாய் தீவுகளின் பகுதிகளில் அலைகளின் உயரம் சராசரி அளவை விட 3 மீட்டருக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலாவ், மார்ஷல் தீவுகள், சூக் மற்றும் கோஸ்ரே ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் 0.3 முதல் 1 மீட்டர் வரை சுனாமி அலைகள் இருக்கும் என்று அந்த அமைப்பு கணித்துள்ளது. தென்கொரியா, வடகொரியா மற்றும் தைவானின் கடற்கரைகளில் 0.3 மீட்டருக்கும் குறைவான சிறிய சுனாமி அலைகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.