சமீபத்தில் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, அடுத்த பந்தயத்தில் பங்கேற்க அஜித்குமார் போர்ச்சுக்கல் புறப்பட்டுள்ளார்.
போர்ச்சுக்கலில் ‘தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025’ நடைபெற இருக்கிறது. இந்த போட்டி, தெற்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள கார் பந்தய வீரர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இப்போட்டிகள் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் என இரண்டு நாடுகளில் 2 நாட்கள் போட்டியாக நடக்கும். இதன் டிராக் நேரம் 6 மணி நேரமாக இருக்கும். அதிகபட்சமாக 30 கார்கள் வரை இதில் பங்கேற்கலாம். கார் பந்தயங்களில் கொடி கட்டி பறக்க விரும்பும் ஆர்வலர்களுக்கு இந்த போட்டி சவாலான ஒன்று.
முதல் விஷயம் இதில் பங்கேற்கும் கார்கள் உயர் தொழில்நுட்பத்தை கொண்டிருக்க வேண்டும். மற்ற போட்டிகளை விடவும், இதில் பங்கேற்க தனி சிறப்புமிக்க கார்கள் வேண்டும். தெற்கு ஐரோப்பாவில் உள்ள போர்டிமோ, எஸ்டோரில் மற்றும் பார்சிலோனா-கேடலுனியா போன்ற டிராக்கள் மிகவும் பிரசித்திப்பெற்றவை. இதில் ஜெயிக்க வேண்டும் எனில் துல்லியம் மிகவும் முக்கியமான ஒன்று. அதேபோல தெற்கு ஐரோப்பா நிலையற்ற வானிலைக்கு மிகவும் பிரசித்திபெற்ற பகுதியாகும். திடீரென மழை, திடீரென வெயில் என வானிலை குழப்பி அடிக்கும். இந்த வானிலை பந்தய ஓட்டுநர்களின் பொறுமையை சோதித்துவிடும். எனவே கவனமாகவும், துல்லியமாகவும் செயல்பட்டால் மட்டுமே வெற்றிப்பெற முடியும். இப்படியான போட்டியில்தான் அஜித்குமார் பங்கேற்க இருக்கிறார். இந்த போட்டியில் அவர் வெற்றிபெற்றுவிட்டால் அது மிகப்பெரிய சாதனையாக கருதப்படும்.
![](https://enews1st.lk/wp-content/uploads/2025/01/puthiyathalaimurai2F2025-01-122Fefmvtx822Fweb-11.png)
முன்னதாக துபாயில் நடந்த போட்டியில் அஜித்குமார் ஜெயித்திருந்தது பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றிருந்தது. திரைப்படங்களை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் வேறு ஒரு துறையில் அஜித்குமார் வெற்றிக்கொடி நாட்டியிருப்பது அவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025′ போட்டியில் பங்கேற்கும் அஜித்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.