மெக்சிகோ வளைகுடா பெயரை மாற்றப் போவதாக அறிவிப்பு வெளியிட்ட, அமெரிக்கா அதிபர் (தேர்வு) டொனால்டு டிரம்புக்கு, அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன் பாம் பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். அவர் தனது நிர்வாகத்தில் பணிபுரியும் அனைவரையும் தேர்வு செய்து விட்டார். வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார். அவர் தற்போது மற்ற நாடுகளுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார். சமீபத்தில் கிரீன்லாந்து நாட்டிற்கு உரிமை கொண்டாடினார். ஆனால் அந்நாடு தக்க பதிலடி கொடுத்தது.
தற்போது கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணம் ஆக்குங்கள் என கூறியிருந்தார். இதற்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கிடையே, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைத்திருக்கும், அகண்ட அமெரிக்கா வரைப்படத்தை வெளியிட்டு டிரம்ப் பரபரப்பை கிளப்பி இருந்தார். இந்நிலையில், அவர், மெக்சிகோ வளைகுடாவை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும், அவர், ‘இது அழகான பெயர். பொருத்தமானது என்று கூறியிருந்தார். இதற்கு, பதில் அளித்து மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் கூறியதாவது: மெக்சிகோ நாட்டின் ஒரு பகுதியாக இருந்த டெக்ஸாஸ், அரிசோனா, நெவாடா, நியூ மெக்சிகோ, கலிபோர்னியா மாநிலங்கள் இப்போது அமெரிக்காவிடம் இருக்கின்றன. அதனால் அந்த பகுதிகளை, மெக்சிகன் அமெரிக்கா என்று பெயர் மாற்றலாம்; அதுவும் நன்றாக இருக்கிறது.
உண்மை என்னவென்றால் மெக்சிகோ வளைகுடா என்ற பெயர் 17ம் நூற்றாண்டில் இருந்து அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ வளைகுடா பெயரை மாற்றுவதாக, டிரம்ப் கூறுவதை ஏற்க முடியாது. எதிர்காலத்தில் ஒரு நல்ல உறவு இருக்கும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
62 வயதான மெக்சிகோவில் அதிபர் கிளாடியா ஷீன்பாம் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வரி விதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் தொடர்பாக டிரம்ப் மெக்சிகோவுடன் பலமுறை மோதிக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.