Sunday, March 9, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஅதானி திட்டம் இன்னும் நிறுத்தப்படவில்லையா?

அதானி திட்டம் இன்னும் நிறுத்தப்படவில்லையா?

அதானி நிறுவனத்துடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்துச் செய்யப்படவில்லை என வலுசக்தி கௌரவ அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் அண்மையில் (06) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தக் குழுவில் பங்கேற்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் திட்டம் குறித்து வினவியதற்குப் பதிலளித்த கௌரவ அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவிக்கையில், அதானி நிறுவனத்தின் மின் திட்டத்தின் கட்டணங்கள் அதிகமாக இருந்ததால், அதை மீண்டும் மறுபரிசீலனை செய்ய அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டதாகவும், அந்த சந்தர்ப்பத்தில், இந்தத் திட்டத்திலிருந்து விலகுவதாக இலங்கை முதலீட்டு சபைக்கு இந்திய அதானி தாய் நிறுவனத்திலிருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய முதலீட்டு சபை இது குறித்து அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எனினும், காற்றாலை மின் திட்டம் தொடர்பாக இலங்கையில் உள்ள அதானி நிறுவனத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் நிறுவனத்துடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும், எனவே இந்த விடயத்தைப் பரிசீலிக்குமாறு அந்த நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதற்கமைய, கடிதத்தை அனுப்பி இரண்டு வாரங்களுக்குள் பதில் எதிர்பார்க்கப்படுவதாக கௌரவ அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.

அதனால், இந்த இரண்டு வாரங்களில் எதிர்மறையான பதில் கிடைக்கப்பெற்றால் மாத்திரம் ஏனைய மாற்றீடொன்றுக்கு செல்லவேண்டிவரும் என அவர் தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் இவ்வாறான திட்டங்களை அரசாங்கங்களுக்கிடையில் (G2G) ஒப்பந்தங்கள் மற்றும் போட்டியான கொள்முதல் என்பன மூலம் மாத்திரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை மின்சார சபையில் பொறியாளர்கள் உள்ளிட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், பொருளாதார நெருக்கடியின் போது பல பொறியாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றதால் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக குழுவில் கலந்துகொண்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனினும், இந்த வெற்றிடங்களை மூன்று தொகுதிகளாக நிரப்புவதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், இதில் முதல் தொகுதி விரைவில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், திடீர் மின்வெட்டு குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், கட்டமைப்பில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் கூட கட்டமைப்பை நிலையற்றதாக மாற்றக்கூடும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதனால், சூரிய சக்தி போன்ற ஏனைய மாற்று மூலங்களைப் பயன்படுத்தி அமைப்பை நிலையாகப் பராமரிக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

வீதி விளக்குகள் போதுமானளவு பராமரிப்பு செய்யப்படாமை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், வீதி விளக்குகள் தொடர்பாக உள்ளூராட்சி நிறுவனங்களும் இலங்கை மின்சார சபையும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. விசேடமாக, இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பதால், உள்ளூராட்சி நிறுவனங்களும் மின்சார சபையும் இணைந்து இந்தப் பிரச்சினை குறித்து கலந்துரையாடுவது பொருத்தமானது என்று குழு சுட்டிக்காட்டியது. இது தொடர்பான கொள்கை இரண்டு மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச ரீதியாக இந்த அமைச்சுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular