இலங்கையில் இப்படி ஒரு கிராமத்தில் இப்படி ஒரு பாடசாலை உள்ளதா எனப் பலர் வியக்கும் வகையில் கண்டி மாவட்ட எல்லையில், மினிப்பே பிரதேசத்தில் கலமுதுன என்ற கிராமத்தில் ஒரு பாடசாலை இயங்கி வருகிறது.
மினிப்பே, கலமுதுனவில் அமைந்துள்ள பாடசாலைக்கு மிகவும் கடினமான பாதையூடாகவே பயணிக்க வேண்டியுள்ளது. குறித்த பாடசாலையில் ஒரேயொரு அசிரியர் மாத்திரமே கல்வி கற்பிக்கின்றார். அங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. வாகனங்ள் ஏதும் குறித்த பகுதிக்கு செல்லமுடியாது. குறிப்பிட்ட தூரம் வாகனத்தில் சென்று பின்னர் மைல் தூரம் நடை பயணமாகவே பாடசாலைக்கு செல்ல வேண்டும்.
ஆனால் இம் முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் அந்த ஒரு ஆசிரியர் மாத்திரமே சகல பாடங்களையும் கற்பித்து அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் சிறப்பாக தேர்ச்சி பெறவைத்துள்ளார். ஆனால் அங்கு 11 ம் தரத்தில் 5 மாணவிகள் மாத்திரமே கல்வி கற்று வந்துள்ளனர். மேலதிக வகுப்பு வசதிகள் கிடையாது. மின்சாரம் கிடையாது, தொலைபேசி வசதி இல்லை, பத்திரிகைகள் கூட அங்கு கிடைப்பதில்லை.
மினிப்பே பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கலமுதுன கிராமத்தில், 40 குடும்பங்கள் வசிக்கின்றன. குறித்த குடும்பங்கள் அனைவரும் பௌத்த சிங்களவர்கள், விவசாயத்தையும் இயற்கை மழையையும் நம்பி வாழ்பவர்கள்.
அங்குள்ள ஒரே பாடசாலையில் 18 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்த பின்தங்கிய பாடசாலையில் படித்து, கல்வி பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சையில் ஐந்து பேர் தோற்றி, நான்கு பேர் திறமையாகச் சித்தியடைந்துள்ளனர். அவர்கள் ஒரே ஆசிரியரின் சிறந்த வழிகாட்டுதலின் காரணமாக, அனைத்து பாடங்களிலும் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தப் பாடசாலைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதியன்று பி. ஜனக தனுந்தர ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியராக வந்து சேர்ந்தார். இவர் அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்தவர். குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்காக அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்கள் காரணமாக, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் திறமை சித்தியடைந்தனர்.
முதலாம் ஆண்டு முதல் க.பொ.த. (சா/த) வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்தப் பாடசாலையில் விஞ்ஞான ஆய்வு கூடமோ அல்லது அடிப்படை வசதிகளோ இல்லாத நிலையில் மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், மனைப் பொருளியல், மற்றும் வணிக பாடங்களைக் கற்பிக்கவும், அதிபராக கடமையாற்றவும் தனி ஒரு ஆசிரியராக இவர் செய்துவரும் வரும் சேவை வார்த்தைகளால் விபரிக்க முடியாதவை.
குறித்த கிராமத்திற்கு ஒரேயொரு அரச அதிகாரியான கிராம அலுவலர் மட்டுமே அங்கு செல்கிறார். அதுவும் தேர்தல் பணிக்காக தேர்தல் காலங்களில் மாத்திரமே அங்கு வருவதாக பொது மக்கள் கூறுகின்றனர். அண்மையில் மஹியங்கனை வர்த்தக சங்க உறுப்பினர்கள் இந்த ஆசிரியருக்கு ஒரு பாராட்டு விழாவை நடத்தி அவரது மனிதாபிமான சேவையை பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





