நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 366 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இன்று காலை 9 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சீரற்ற வானிலை காரணமாக 318,252 குடும்பங்களைச் சேர்ந்த 1,156,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்ச உயிரிழப்புகள் கண்டி மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளன.
குறித்த மாவட்டத்தில் மாத்திரம் 88 மரணங்கள் இதுவரை பதிவாகியுள்ளன.
அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 75 மரணங்களும், பதுளை மாவட்டத்தில் 71 மரணங்களும், குருநாகலில் 37 மரணங்களும், மாத்தளை மாவட்டத்தில் 23 மரணங்களும் புத்தளம் மாவட்டத்தில் 10 மரணங்களும் இதுவரை பதிவாகியுள்ளன.
மேலும், அனர்த்தங்கள் காரணமாக கண்டி மாவட்டத்தில் 150 பேரும், நுவரெலியாவில் 62 பேரும், பதுளையில் 53 பேரும், கேகாலை மாவட்டத்தில் 46 பேரும், குருநாகலில் 35 பேரும் இதுவரை காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை களனி ஆற்றில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த கட்டப்பட்ட களனிமுல்ல வெள்ள அணை உடையும் அபாயம் இருப்பதாக ஒரு ஆதாரமற்ற செய்தி பரவி வருகிறது. களனிமுல்ல வெள்ள அணை மணல் மூட்டைகளால் பலப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அந்த பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பாக தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







