சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (05) மாலை 06.00 மணிக்கு வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் புள்ளிவிபரங்களின்படி, அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளதுடன், 214 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதில் அதிகளவாக கண்டி மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 232 பேர் உயிரிழந்துள்ளதுடன், நுவரெலியா மாவட்டத்தில் 89 பேரும், பதுளை மாவட்டத்தில் 83 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 61 பேரும் குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை 25 மாவட்டங்களிலும் 5 லட்சத்து 86ஆயிரத்து 464 குடும்பங்களைச் சேர்ந்த 20 லட்சத்து 82ஆயிரத்து 195 பேர் குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 1,211 இடைத்தங்கல் முகாம்களில் சுமார் 43ஆயிரத்து 715 குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 52ஆயிரத்து 537 பேர் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சொத்து சேதங்களைப் பொறுத்தவரையில், 4ஆயிரத்து 164 வீடுகள் முழுமையாகவும், 67ஆயிரத்து 505 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


