புத்தளம் மாவட்டத்தின் இயல்பு நிலையை மீளக் கட்டியெழுப்ப தேவையான அத்தியாவசிய உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்கான விஷேட கூட்டம் இன்று 13.12.2025 புத்தளம் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
புத்தளம் மாவட்ட செயலாளர் திரு.Y.I.M. சில்வா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், அதிமேதகு ஐனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டு, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் நிலைமைகளை கேட்டறிந்துகொண்டார்.
சேதமடைந்த மாவட்டத்தின் வீதிகளை மீளமைப்பது, மின்சாரம், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் ஏனைய அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மீளக்கட்டியெழுப்புவது மற்றும் விவசாயம், கால்நடைத் துறை, மீன்பிடி, சுகாதாரம், கல்வி போன்ற துறைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து இதன்போது தனித்தானியாக கேட்டறிந்ததோடு இந்த அனைத்துப் பணிகளிலும் முப்படை, அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்புகள் பற்றியும் அதிகம் கவனம் செலுத்தப்பட்டது.
ஒவ்வொரு பிரஜைக்கும் பாதுகாப்பான வாழ்க்கையைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்தி முடிந்தவரை திட்டங்களை நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இந்த அவசரகால நிலைமையில் சிரமங்களைப் பொருட்படுத்தாமல், அனைத்து நிறுவனங்களும் தங்கள் பொறுப்புகளை நன்கு ஒருங்கிணைந்து நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது ஜானதிபதி சுட்டிக்காட்டினார்.
வெள்ளத்தினால் முற்றாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக, அவர்கள் விரும்பினால் வீடொன்றை வாங்குவதற்கு ஒரே தடவையில் 50 லட்சம் ரூபாய் ரொக்கமாக வழங்க முடியும் எனவும், இருக்கும் காணியில் புதிய வீடொன்றை கட்டுவதற்கும், அல்லது காணி இல்லாதவர்கள் அரச காணிகளில் குறித்த வீடுகளை கட்டுவதற்கும் குறித்த நிதியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
மேலும் கல்பிட்டி பகுதியில் அதிகளவான மரக்கறி உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன், ஆராச்சிகட்டுவ மற்றும் வணாதவில்லு பிரதேச செயலகங்களுக்குற்பட்ட பகுதிகளில் அதிகளவான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை சிலாபம் மாவட்ட வைத்தியசாலை வெள்ள அனர்த்தத்தினால் முற்றாக ஸ்தம்பித்துள்ளதுடன், அங்கிருந்த நோயாளர்கள், புத்தளம், மாறவில மற்றும் அண்டிய வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இதன்போது ஜனாதிபயின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
குறித்த வெள்ள அனர்த்தத்தினால் மன்னார் – எழுவன்குளம் வீதியின் பாலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சீரமைக்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டமைக்கு, இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், அதற்கு உற்பட்ட வகையிலே செயற்பட முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னார் – எழுவன்குளம் ஊடாக பொதுப்போக்குவரது இடம்பெற்றதாகவும், தற்போது அதற்கான சாதகமான சூழல் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அனர்த்தத்தின்போது அர்ப்பணிப்புடன் பங்காற்றிய அரச அதிகாரிகள், பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்ததுடன், மக்கள் இயல்புநிலைக்கு செல்ல தேவையான அணைத்து நடவடிக்கைகளையும் விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் கெளரவ வடமேல் மாகாண ஆளுநர், பாதுகாப்பு செயலாளர், கெளரவ அமைச்சர் மற்றும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.










