அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின், தென்- மத்திய டெக்சாஸ் மாகாணத்தின், மலைப் பகுதியில் அமைந்துள்ள கெர் கவுன்டியில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் திடீரென கனமழை கொட்டியது. இதனால் குவாடலுாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குவாடலுாப் நதியில் 45 நிமிடங்களில் 26 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்து, கரையில் இருந்த குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். மேலும் குவாடலுாப் ஆற்றங்கரையோரம் இருந்த கிறிஸ்துவ கோடைக்கால முகாமில் தங்கியிருந்தவர்களில், 27 பெண்கள் மாயமாகி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
வெள்ளம் ஏற்பட்ட போது முகாமில் 700 பெண்கள் இருந்துள்ளனர். இறந்தவர்களில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கெர் கவுன்டியின் சராசரி ஆண்டு மழைப்பொழிவில் மூன்றில் ஒரு பங்கு மழை அதாவது, 30 செ.மீ., மழை ஒரே இரவில் பெய்துள்ளதே நிலைமை மோசமாக காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
