தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தின் சுமையை மின்சார நுகர்வோர் மீது சுமத்துவது சட்டவிரோதமான செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விசேட உரையொன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பான தகவல்களை ஐக்கிய மக்கள் சக்தி வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் பொறுப்புள்ள தரப்பினர் இப்போது மக்கள் முன்பாக அந்த நிலக்கரி தரமற்றது என கூறி வருகின்றனர்.
இந்தத் தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் மின் உற்பத்தி செயல்முறை உரிய செயற்திறனை காட்டாது காணப்படுகின்றது.
இந்தத் தரமற்ற நிலக்கரி பயன்பாட்டால் உபகரணங்களுக்கு சேதம் ஏற்படும் போக்கு அதிகரித்துள்ளது.
இதனால் உருவாகும் சாம்பல் அளவு இரண்டு மடங்காக அதிகரித்து, இருக்க வேண்டிய 11–15% என்ற அளவிலிருந்து 21% வரை அதிகரித்து காணப்படுகின்றன.
இந்தச் சாம்பல் வெளியேற்றத்தால் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றன.
எதிர்வரும் 2–3 மாதங்களில் மேலும் 15 முதல் 16 நிலக்கரி கப்பல்கள் இறக்குமதிக்கு கொண்டு வரவப்படவுள்ளன. தரமான நிலக்கரி இறக்குமதி செய்யாமல் தரமற்ற நிலக்கரி பயன்படுத்துவதால் உற்பத்திக்குத் தேவையான மெகாவோட் அளவு குறைந்து, மின்சாரத்துக்கு ஏற்படும் தட்டுப்பாட்டை ஈடுசெய்ய எரிபொருள் மின் நிலையங்களை நாட வேண்டியுள்ளதால், நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் மின் நுகர்வோருக்கும் பாரிய பண நட்டம் ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு மின்சார சட்டத்தின் 30 ஆவது பிரிவின்படி, வினைத்திறனான மின்உற்பத்தி மூலம் மட்டுமே மின்சார நுகர்வோரிடம் கட்டணம் அறவிட முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மின்சார நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும். இந்தத் தரமற்ற நிலக்கரியால் ஏற்படும், நஷ்டகரமான, ஒழுங்கீனமான மின்உற்பத்தி காரணத்தால் ஏற்பட்ட பெரும் நிதி நஷ்டத்தை நாட்டின் சுமார் 75 இலட்சம் மின் நுகர்வோரிடம் இருந்து அறவிட அரசாங்கத்திற்கோ பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கோ எந்த வகையிலும் முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தரமற்ற நிலக்கரி பயன்படுத்தி ஏற்பட்ட நஷ்டத்தின் சுமையை மின்சார நுகர்வோர் மீது சுமத்துவது சட்டவிரோதமான செயலாக அமைந்து காணப்படுகின்றன.
முறைமையில் மாற்றம் கொண்டு வருவதாக வாக்குறுதியளித்த தற்போதைய அரசாங்கம் இன்று தரமற்ற நிலக்கரியை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. ஏற்பட்ட இந்த நட்டத்தில், இழந்த பணத்தால் பாடசாலைகள், வைத்தியசாலைகளை நிர்மாணித்திருக்க முடியும்.
வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்திருக்கும். புதிய தொழில்களை ஆரம்பித்து அவற்றை முன்னேற்ற முடிந்திருக்கும்.
ஆனால் முறைமையில் மாற்றத்தை கொண்டு வருவோம் என வாக்குறுதியளித்த அரசாங்கம் மிகவும் ஊழல் நிறைந்த தரமற்ற நிலக்கரி திட்டத்தை நடைமுறைப்படுத்தி நாட்டையும் மக்களையும் ஏமாற்றியுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.


