இலங்கையின் தற்போதைய பொருளாதாரப் போக்கு மற்றும் அரசாங்கத்தின் நகர்வுகள் குறித்து மக்கள் மத்தியில் நிலவி வந்த சாதகமான பார்வையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. வெரிடே ரிசர்ச் (Verité Research) நிறுவனம் வன்கார்ட் சர்வே (Vanguard Survey) அமைப்புடன் இணைந்து ஜூலை 2026 இல் முன்னெடுத்த “நாட்டின் மனநிலை” (Mood of the Nation) தொடர்பான அண்மைக்காலக் கருத்துக்கணிப்பில் இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் தரவுகள் பதிவாகியுள்ளன.
கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் எதிர்காலம் குறித்த பொதுமக்களின் நம்பிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் “நல்லது” அல்லது “மிகச்சிறந்தது” என 38% வீதமானோர் மாத்திரமே கருதுகின்றனர்; மாறாக, அரைவாசிக்கும் அதிகமானோர் (55.59%) நிலைமை மிகவும் பின்னடைவை நோக்கிச் செல்வதாகக் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலைமை எதிர்காலக் கணிப்புகளிலும் எதிரொலித்துள்ளது. பொருளாதாரம் சீரடைந்து வருவதாக பெப்ரவரியில் நம்பிக்கை வெளியிட்ட 64% பேரின் விகிதம், ஜூலையில் 41.63% ஆகக் குறைந்துள்ளதுடன், நிலைமை மேலும் மோசமடைந்து வருவதாகக் கூறுவோரின் எண்ணிக்கை 15% இலிருந்து 40.29% ஆகக் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, பொருளாதார நம்பிக்கைக் குறியீடு (Economic Confidence Index) முன்னெப்போதும் இல்லாத வகையில் +36 புள்ளிகளிலிருந்து -8 புள்ளிகள் என்ற எதிர்மறை நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
பொருளாதார விவகாரங்கள் ஒருபுறமிருக்க, தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீதான மக்களின் ஆதரவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது. அரசாங்கத்தின் செயற்பாடுகளில் திருப்தி காண்போரின் அளவு 65% இலிருந்து 50% ஆகக் குறைந்துள்ள அதேவேளை, அரசாங்கத்தின் செயற்பாடுகளை நிராகரிப்போரின் எண்ணிக்கை 15% இலிருந்து 31.40% ஆக இரட்டிப்பாகியுள்ளது.
பொருளாதார மீட்சியின் மந்தகதி மற்றும் பொதுமக்களின் நாளாந்த வாழ்வாதார நெருக்கடிகளே இந்த திடீர் மனமாற்றத்திற்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டப்படும் நிலையில், இந்தத் தரவுகள் நாட்டின் எதிர்காலக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் அரசியல் தளத்திற்கும் முக்கியமானதொரு சமிக்ஞையாக மாறியுள்ளது.


