அரச வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தரமான, போஷாக்கு நிறைந்த மற்றும் சுவையான உணவு வேளையை வழங்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் முன்னோடித் திட்டம் நாளை (06) மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நோயாளர்களுக்கு வழங்கப்படும் பாரம்பரிய ஒரே தட்டில் உணவு வழங்கும் முறைக்கு பதிலாக, சோறு, காய்கறிகள், கீரை, இறைச்சி, மீன், முட்டை உள்ளிட்ட உணவு வகைகளை தனித்தனியாக வைக்கப்பட்ட விசேட தட்டு ஒன்றில் உணவு பரிமாறப்படுவது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
அவ்வாறு தயாரிக்கப்பட்ட உணவு வேளையைக் கண்ட உடனேயே நோயாளருக்கு உணவருந்தும் விருப்பமும் ஆவலும் ஏற்படும் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போது மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் 2000 நோயாளர்களுக்கு உணவு சமைக்கக்கூடிய நவீன வசதிகளுடன் கூடிய சமையலறை ஒன்று நிறுவப்பட்டுள்ளதுடன், அதுவும் நாளைய தினம் விசேட வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக திறந்து வைக்கப்படவுள்ளது.
இங்கு பாரம்பரிய “சமையலறை” அல்லது “kitchen” என்ற பெயருக்குப் பதிலாக “உணவு மற்றும் பானங்கள் திணைக்களம்” என பெயரிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
நவீன முறையில் உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுவதற்காக சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு விசேட பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வேலைத்திட்டத்தை எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு விரிவுபடுத்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


