ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான அலி சாஹிர் மௌலானாவின் கட்சி அங்கத்துவத்தை இடைநிறுத்தி செயலாளர் நிசாம் காரியப்பர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
2024 ஆகஸ்டு 4ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்சி தீர்மானங்களை பாரதூரமாக மீறியமை காரணமாக அவரிடம் மேலதிக விளக்கம் கோரி குறித்த செயலாளறினால் குறித்த கடிதம் அனுப்பி வைகக்கப்பட்டுள்ளது.
2024 ஆகஸ்ட் 4ஆம் திகதி நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் கட்சி உயர்பீட கூட்டத்தில் நீண்ட கலந்துரையாடலுக்குப் பின்னர் 2024 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
நீங்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லையாயினும், அதற்காக மன்னிப்புக் கோரி பின்வருமாறு செய்தி அனுப்பியிருந்தீர்கள்:
“இன்றைய கூட்டத்தில் நான் உடல் ரீதியாக கலந்து கொள்ள வில்லையாயினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தலைவரும்,உயர் பீடமும் எமது கட்சியின் நிலைப்பாட்டுடன் மேற்கொள்ளும் எத்தகைய முடிவுடனும் நான் இருப்பேன். கூட்டத்தின் போதும் அதன் பின்னரும் என்னிடமிருந்து கிடைக்க வேண்டிய பங்களிப்பை தயவு செய்து தயவு செய்து எந்த நேரத்திலும் எனக்குத் தெரியப்படுத்தத் தயங்க வேண்டாம். கட்சியின் மீதான விசுவாசத்துடனான என் உணர்வுகளை வெளிப்படுத்துவேன். இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத எனது இயலாமையும், தங்களது மன்னிப்பையும், புரிந்துணர்வையும் வேண்டி நிற்கின்றேன். எனது சலாம் உரித்தாவதாக- இப்படிக்கு, சையத் அலி சாஹிர் மௌலானா”.
இந்த உறுதிமொழிக்கு முற்றிலும் மாற்றமாக, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை நீங்கள் ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
2024 ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை நீங்கள் ஆதரிப்பது கட்சியின் தீர்மானத்தை முழுமையாக மீறும் செயலாகும் என்பதோடு, அதேபோன்று, 22 ஜூன் 2024 அன்று நடைபெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டில் பிரதித் தலைவர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட போது உங்கள் சத்திய கடதாசியில் நீங்கள் அளித்த உறுதிமொழிக்கும் முரணாக இருக்கின்றது.
ஆகையால், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் உங்களது கட்சி அங்கத்துவத்தை இடை நிறுத்துமாறு அறிவிக்கும்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் என்னைப் பணித்துள்ளார் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்திற்கு உடனடியாக நீங்கள் வட்ஸ்அப் (WhatsApp)பில் கூட பதிலளிக்கலாம்.
நீங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் செய்தி தவறாக இருந்தால் அல்லது கட்சி தீர்மானங்களை மறுப்பதற்கான வேறு ஏதாவது ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய காரணம் இருந்தால் உங்களது பதிலை ஒரு கிழமைக்குள் கிடைக்குமாறு எழுத்து மூலம் தெரிவிக்கலாம் எனவும் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் பதில் அல்லது பதிலளிக்காமை பற்றி ஆராய்வதற்காக கட்சியின் உயர் கூட்டம் இம்மாதத்திற்குள் நடைபெறும் என்றும் தலைவர் உங்களுக்கு அறிவிக்குமாறு பணித்துள்ளதாக குறிப்பிட்ட செயலாளர் நிசாம் காரியப்பர், செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறக்கூடிய சூழ்நிலையில் அவசரத்தை கருத்தில் கொண்டு உங்களுக்கு இதற்கான நேர அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது என்றும் குறித்த கடிதத்தில் குறிபிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.