அரசாங்கத்தின் செயற்திட்டங்களின் பலவற்றின் சொற்கள் மக்களுக்கு புரியவதில்லை. திட்டத்தின் தலைப்பு புரியாத சந்தர்ப்பத்தில் அந்தத் திட்டம் எவ்வாறு வெற்றியளிக்கும் என்பது சந்தேகத்திற்குரியது. அஸ்வெசும என்பதன் அதன் தமிழாக்கம் என்ன, 16ஆம் திருத்தச் சட்டத்தில் வடக்கு கிழக்கில் ஆட்சி மொழி தமிழாகும். புதிய சொற்பதங்களை அறிமுகப்படுத்தும் போது அதற்குரிய தமிழ் பதங்களை அறிமுகம் செய்யுங்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் நாட்டுக்கு தேவையானதொரு செயற்திட்டமாகும். இதனூடாக பல விடயங்கள் இந்த நாட்டில் கிளீன் செய்ய வேண்டியுள்ளது. நாட்டின் அரசியல், பொருளாதாரம், சமூக கட்டமைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் ஊடாக இந்த திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும். இந்த வேலைத்திட்டத்தின் நல்ல விடயங்களுக்கு இந்த அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
இந்த செயற்திட்டத்தின் நோக்கமாக நீண்டகாலமாக நிலைத்திருக்க சமூக கலாச்சார மாற்றங்களை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். . இது ஒரு இனத்திற்காக அன்றி அனைத்து இன மக்களுக்குமான வேலைத்திட்டமாக உங்களுடன் பணியாற்ற நாங்கள் விரும்புகின்றோம். நல்ல நடத்தை மாற்றத்தை செய்யாது இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது.
இதனை நாங்கள் முதலில் செய்ய வேண்டும். இந்த வேலைத்திட்டம் தொடர்பான விளக்கமளிக்கும் நிகழ்ச்சியொன்றை பார்க்க முடியுமாக இருந்தது. அது இரண்டு மொழியில் மட்டுமே செய்யப்பட்டது. தமிழ் மொழியில் அது இருக்கவில்லை. இதனால் நடத்தை மாற்றத்தை எங்களிடம் இருந்து ஆரம்பித்து தமிழையும் அதில் சேருங்கள் என்று கோருகின்றோம்.
இதேவேளை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் பலவற்றின் சொற்கள் மக்களுக்கு புரியவதில்லை. வேலைத்திட்டத்தின் தலைப்பு புரியாது அந்தத் திட்டம் எவ்வாறு வெற்றியளிக்கும் என்பது சந்தேகத்திற்குரியதே.
அஸ்வெசும என்றால் அதன் தமிழாக்கம் என்ன? 16ஆம் திருத்தச் சட்டத்தில் வடக்கு கிழக்கில் ஆட்சி மொழி தமிழாகும். புதிய சொற்பதங்களை அறிமுகப்படுத்தும் போது அதற்குரிய தமிழ் பதங்களையும் கொண்டு வாருங்கள். உறுமய போன்ற திட்டங்களின் தமிழ் பொருளையும் வெளிப்படுத்த வேண்டும்.
அத்துடன் மத நல்லிணக்க அமைச்சின் பௌத்த சாசன அமைச்சு மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. முன்னைய அரசாங்கங்களில் மூன்று மதங்களுக்கும் தனித்தனி அமைச்சுகள் இருந்தன. இந்நிலையில் கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்தில் அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கக்கூடிய வகையில் திட்டத்தை முன்னெடுப்பீர்கள் என நம்புகின்றோம் என்றார்.