பழங்குடி மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட பாராளுமன்ற சட்டமூலத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக மற்றும் பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து காணப்படும் சட்ட சிக்கல்களை தீர்ப்பதற்கு சுற்றாடல் அமைச்சு ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நேற்று (22) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
பழங்குடி மக்களின் வரலாற்றுப் பெறுமதி தொடர்பாக தெளிவுபடுத்திய இக்கலந்துரையாடலில் பங்குபற்றிய ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலெத்தன், தற்போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பிரதமரின் கவனத்திற்கு முன் வைத்தார். ஐக்கிய நாடுகள் பிரகடனத்திற்கு இணங்க தயாரிக்கப்பட்ட பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான சட்டம் குறித்தும், பழங்குடியினரின் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்திய ஆதிவாசி மக்களின் தலைவர், இதுவரை காலமும் இருந்த அரசாங்கங்கள் ஒவ்வொரு நடவடிக்கைகளை எடுத்தாலும் அப்பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது, பழங்குடி மக்கள் நாட்டின் வரலாற்றுச் சொத்து என்றும், அவர்களைப் பாதுகாத்து, அவர்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொடுப்பது அத்தியாவசியமானது என்றும் கலாசார அமைச்சர் சுனில் செனவி வலியுறுத்தினார்.
சுற்றாடல் அமைச்சின் ஊடாக ஆதிவாசிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவசியமான சட்ட விதிகளை அங்கீகரித்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதாகவும் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி சுட்டிக்காட்டினார்.
அதற்காக காணப்படும் சட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக சுற்றாடல் அமைச்சு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் தெளிவுபடுத்தினர்.