இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை, நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, இணைய சந்தை தளத்தை இயக்குபவர்கள், பொருட்களை விளம்பரப்படுத்தும் போது எந்தவொரு பிரதிநிதித்துவத்தையோ அல்லது தகவல் புறக்கணிப்பையோ செய்யக் கூடாது.
அத்துடன், ஏமாற்றும், தவறாக வழிநடத்தும் அல்லது போட்டிக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளின் உண்மை விலையானது குறித்த பொருளுக்காக, இணைய சந்தை தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலையாகும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அத்துடன், முன்பதிவை உறுதிப்படுத்தல், போக்குவரத்து மற்றும் விநியோகத்தை ஒருங்கிணைத்தல் மற்றும் முன்பதிவை இரத்துச் செய்யும் உரிமை என்பன குறித்த வர்த்தமானி மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.