ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசை ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. தலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியது.
இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கான செயல், பல்வேறு துறைகளில் நமது நாடுகளுக்கு இடையே உற்பத்தி ரீதியான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உத்வேகம் அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்களால் நியமிக்கப்பட்ட புதிய ஆப்கானிஸ்தான் தூதர் குல் ஹசன் ஹாசனை ரஷ்ய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. இந்த நடவடிக்கையின் மூலம், 2021ல் தலிபான் தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து அதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா ஆனது.
மாஸ்கோவில் நடந்த ஒரு சிறப்பு நிகழ்வில் ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ, ஆப்கானிஸ்தான் தூதர் குல் ஹசன் ஹாசனை சந்தித்தார். காபூலில் உள்ள தலிபான் அதிகாரிகள் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையைப் பாராட்டினர். மேலும் இது உறவுகளை வலுப்படுத்த உதவும். இது எங்கள் உறவுகளின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்’ என்று தலிபானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் கூறினார்.
ஆகஸ்ட் 2021ல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ரஷ்யா காபூலில் தனது தூதரகத்தைத் திறந்து வைத்துள்ளது. தலிபான் தலைவர்களுடன், ரஷ்ய அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.இதுவரை, வேறு எந்த நாடும் தலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. சீனா, பாகிஸ்தான் நாடுகள், தலிபான் அரசின் துாதரை ஏற்றுக் கொண்ட போதிலும், இதுவரை தலிபான் அரசை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.