எத்தியோப்பியாவில் ஆற்றில் லாரி கவிழ்ந்த விபத்தில், 71 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எத்தியோப்பியா நாட்டின் கிராமப் பகுதிகளில் திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பஸ்களை வாடகைக்கு எடுத்து செல்வதற்கு, பதிலாக லாரியில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். லாரியில் பயணம் செய்தால், செலவு குறைவு என்பதால், மக்கள், இவ்வாறு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், தெற்கு எத்தியோப்பியாவின் சிடாமா பகுதியில் திருமண நிகழ்வுக்காக லாரி ஒன்றில் 70க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தனர். தலைநகர் அடிஸ் அபாபாவிற்கு தெற்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிடாமா மாநிலத்தில் சென்று கொண்டிருந்த போது ஆற்றில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணி மேற்கொண்டனர்.
இந்த விபத்தில், 71 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆற்றுப் பாலத்தில் டிரைவர் லாரியை அதிவேகமாக இயக்கியது தான் விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.