“ஒன்றிணைந்த தேசம்” (A Nation United) என்ற தேசிய திட்டத்தின் கீழ் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் மூலம் இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் இரண்டு மீன்பிடி படகுகளுடன் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்,.
இன்று ஜனவரி 25 ஆம் தேதி திக்கோவிட்டை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட இரண்டு படகுகளையும் பரிசோதித்த போது, அவற்றில் 14 சாக்குகளில் பொதி செய்யப்பட்டிருந்த 184 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 112 கிலோகிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ (crystal methamphetamine) போதைப்பொருள் கண்டறியப்பட்டது.
கடற்படையின் ஆழ்கடல் ரோந்து கப்பல்களைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு படகில் 5 சந்தேகநபர்களும், மற்றைய படகில் 6 சந்தேகநபர்களும் தொடர்பாடல் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
முப்படையினர், பொலிஸார் மற்றும் அனைத்து புலனாய்வு அமைப்புகளும் ஒன்றிணைந்து இந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டு பெற்ற வெற்றிகளைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டிலும் இந்த கூட்டு முயற்சி தொடர்கிறது என அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் கடத்தல் என்பது ஒரு தேசிய நெருக்கடி என விபரித்த அமைச்சர், மீன்பிடி நடவடிக்கைகளின் மறைவில் இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் தப்பிக்க முடியாது என எச்சரித்தார். மேலும், சந்தேகத்திற்கிடமான கடத்தல்கள் குறித்து 1818 அல்லது 1997 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


