ஆஸ்திரேலியாவில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.
இதையடுத்து, ஆன்டனி அல்பனீஸ் மீண்டும் பிரதமராக உள்ளார். பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவில், பார்லிமென்ட் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.
மொத்தம் 150 தொகுதிகளுக்கான தேர்தலில், ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் தலைமையில்ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும், பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கும் கடும்போட்டி நிலவியது.
ஏராளமானோர் ஆர்வத்துடன் ஓட்டளித்த நிலையில், பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், ஆளுங்கட்சி பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி, சொற்ப இடங்களையே கைப்பற்றியது.
இதன் வாயிலாக, ஆஸ்திரேலிய பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆன்டனி அல்பனீஸ் பதவியேற்க உள்ளார். இது, அந்நாட்டில் 21 ஆண்டுகளுக்குபின் நடைபெறும் நிகழ்வாக கருதப்படுகிறது.
இதற்கிடையே, ஆதரவாளர்களிடையே ஆன்டனி அல்பனீஸ் பேசுகையில், ”நாட்டின் எதிர்காலத்தை கட்டமைக்கும் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும்.
”நாங்கள் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை. நம் உத்வேகத்தை வெளியே தேடவேண்டியதில்லை; நம் மக்களிடமே அதை காணலாம்,” என்றார்.
பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்ற ஆன்டனி அல்பனீசுக்கு, நம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
