இலங்கையின் புதிய அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டத்திற்கு இத்தாலி ஆதரவு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டெமியானோ (Damiano Francovigh) பிரான்கோவிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையின் புதிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் திட்டத்திற்கு இத்தாலிய அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று தூதுவர் டெமியானோ பிராங்கோவிக் தெரிவித்தார்.
இலங்கையின் சுற்றுலா, துறைமுகங்கள் மற்றும் முதலீட்டுத் துறைகளுக்கு இத்தாலிய அரசாங்கம் வழங்கக் கூடிய ஆதரவு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இத்தாலியில் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் இலங்கை இளைஞர்களின் விசா பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்க எதிர்பார்த்திருப்பதாகவும் இத்தாலிய தூதுவர் தெரிவித்தார்.
இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்களுக்கும், இத்தாலியில் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கும் சட்டப்பூர்வமான தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகேயும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-02-27