இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தூதுக் குழுவினர் இந்தியா விஜயம்.
சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சரும், ஆளும் கட்சியின் முதற்கோலாசானும், இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவருமான கௌரவ (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான இலங்கை பாராளுமன்ற தூதுக் குழுவினர் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அழைப்பையேற்று ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்தத் தூதுக் குழுவில் கௌரவ பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ஜீ.ஜீ.பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், ஜே.சி.அலவத்துவல, (வைத்தியர்) காவிந்த ஹேஷா ஜயவர்தன, தனுர திசாநாயக்க, ருவன்திலக ஜயக்கொடி, சுனில் பியன்வில, ரியாஸ் பரூக், கௌரவ (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்க, அம்பிகா சாமிவேல், தேவானந்த சுரவீர, சமிந்த ஹெட்டிஆரச்சி, சம்பிக்க ஹெட்டிஆரச்சி, சுதத் பலகல்ல, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி வை.எல்.ரிஷ்மியா, பாராளுமன்ற ஒழுங்குமரபு அதிகாரி ஜீ.ஜீ.சி.எல்.பி.கலன்க, பாராளுமன்ற ஆளும் கட்சி முதற்கோலாசான் அலுவலகத்தின் முகாமைத்துவ உதவியாளர் டபிள்யூ.ஆர்.ஏ.கோஷிகா சுஜீவனி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இந்தத் தூதுக் குழுவினரின் நிகழ்ச்சி நிரலில், லோக் சபா மற்றும் இரஜ்ஜ சபாக்களுக்கான விஜயம், பாராளுமன்ற நூலக விஜயம் மற்றும் இந்திய ஊடகங்களின் வகிபாகம், பாராளுமன்ற குழு முறைமை, உயர் கல்வி, பொது சுகாதாரம், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த கலந்துரையாடல்கள் என்பன உள்ளடங்கியுள்ளன. இந்தத் தூதுக் குழுவினர் சுகாதார சிறப்பு மையத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சங்கங்களின் சம்மேளத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
இந்திய லோக் சபாவின் சபாநாயகர் கௌரவ ஓம் பிர்லாவுடனான சந்திப்பு முக்கியமானதாக அமைந்ததுடன், இலங்கைத் தூதுக்குழுவை இந்திய சபாநாயகர் வரவேற்றார். இத்தகைய பரிமாற்றங்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை குறிப்பாக பாராளுமன்றம், சுகாதாரம், ஊடகம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் என இருதரப்புக் கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த இந்திய சபாநாயகர் தெரிவித்தார்.
இந்தியப் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கு தூதுக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் கௌரவ அமைச்சர் (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற இராஜதந்திரத்தையும் மக்களிடையேயான உறவுகளையும் மேம்படுத்துவதில் இலங்கையின் உறுதிப்பாட்டையும் அவர் மீளவும் வலியுறுத்தினார்.
இந்திய லோக் சபா செயலகத்தில் இலங்கைத் தூதுக் குழுவினருக்கு விளக்கமளிக்கப்படவிருப்பதுடன், இத்துடன் இந்த நிகழ்ச்சிநிரல் வெற்றிகரமாக நிறைவடைகின்றது.

