Tuesday, March 4, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஇந்த அரசாங்கத்தால் நாட்டை ஆள முடியாது!

இந்த அரசாங்கத்தால் நாட்டை ஆள முடியாது!

கடந்த இரண்டு தேர்தல்களிலும் பொய்களை கூறி, மக்களை ஏமாற்றியே வெற்றி பெற்று, இன்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர் உடன்படிக்கையின்படி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய சதவீதத்தை ஒருதலைப்பட்சமாக மீறுவதால் மக்களும் வர்த்தகர்களும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு இந்த நெருக்கடி பாதீப்பை ஏற்படுத்தாது. ஆனால் சாதாரண மக்களே இவற்றுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

இது இவ்வாறே போனால், பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவதுடன், அரச நிறுவனங்களுக்குக் கடனாக வழங்கப்பட்டு வரும் எரிபொருளும் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இவற்றைச் செய்ய முடியாத அரசாங்கமே நாட்டில் காணப்படுகின்றது. இந்த அரசாங்கத்தால் நாட்டை ஆள முடியாது. நாட்டை ஆளும் சரியான தொலைநோக்கு இவர்களிடம் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

அநுராம்புரம், நொச்சியாகம சமனல ஹோட்டலில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

இன்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. மனித – காட்டு யானை மோதலுக்கு புதிய தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை. பயிர் சேதம் மற்றும் சொத்து சேதங்களுக்கான இழப்பீடுகள் இன்னும் வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சியில் இருந்த போது விவசாயிகளுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாக கூறினர், அது இன்னும் வழங்கப்படவில்லை. தற்போது அரசாங்கம் உத்தரவாத விலை 120 ரூபா என கூறி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

விவசாய இயந்திரங்களின் விலை அதிகரித்துள்ளன. உரங்கள், களைக்கொல்லிகள், கிருமி நாசினிகள் மற்றும் உரங்கள் சரியாக கிடைப்பதில்லை. இப்பிரச்சினைகளால் நெல்லுக்கு உத்தரவாத விலையும் வழங்காதிருக்கின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

* விவசாயிக்கு ஏற்ற சிறந்த திட்டத்தை நாம் முன்வைத்திருந்தோம். 

விவசாயிகளுக்கு ஏற்ற சிறந்த திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்திருந்தது. அதை ஏற்றுக்கொள்ளாமல் ஆளுந்தரப்பினர்கள் கூறிய பொய்களை நம்பி தற்போது விவசாயிகள் ஏமாற்றமடைந்துபோயுள்ளனர். எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

* வேலையற்ற பட்டதாரிகள் வீதியில். 

தற்போது நாட்டில் சுமார் 40000 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். அவர்களுக்கு வேலை வழங்கப்படும் என அனுர குமார திஸாநாயக்க அன்று தெரிவித்திருந்தார். ஆனால் இன்று அவர்களுக்கு வேலை கூட வழங்கப்படவில்லை. அதற்கான உரிய ஏற்பாடுகள் கூட இதுவரை முன்வைக்கப்படவில்லை. பட்டதாரிகளையும் இந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். 

* அரச பணியாளர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர். 

பொதுவாக, வரவு செலவுத் திட்டங்களில் சம்பள அதிகரிப்பு என்றால் சரளமாக தெளிவாக கூறப்படும். இம்முறை சம்பளம் அதிகரிப்பு குறித்து தெளிவின்மையான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து உரையையும், ஏனைய ஆவணங்களையும் ஆராய்ந்தே இந்த வரவு செலத்திட்டத்தில் சம்பள அதிகரிப்பு குறித்த விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளன. ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு தடவையிலும் 20,000 ரூபா அதிகரிப்பு வழங்கப்படும் என கூறினாலும், இன்று அது கிடைக்காது முழு அரச சேவையாளர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். 

ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மக்களுக்கு சார்பான முறையில் மாற்றுவதாக கூறினர். ஆனால் எந்த மாற்றமும் இன்றி ரணில் விக்ரமசிங்கவின் உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்கின்றது. ஐக்கிய மக்கள் சக்தியும் மக்களுக்கு சார்பான முறையில் மாற்றுவதாக கூறியது. எமக்கு அதிகாரம் கிடைத்திருப்பின் நாம் மாற்றியமைத்திருப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular