Sponsored Advertisement
HomeLocal Newsஇந்த வாகனங்கள் எல்லாம் இறக்குமதி செய்யப்படுமா!

இந்த வாகனங்கள் எல்லாம் இறக்குமதி செய்யப்படுமா!

304 HS குறியீட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிப் பாகங்கள் இறக்குமதி மீதான தற்காலிக தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் கூடிய நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மீட்பு செயல்முறைக்கு இணங்க, நிதி அமைச்சின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு, 2024 ஒக்டோபர் 01 முதல் மூன்று கட்டங்களாக இந்தத் தடை நீக்கப்படும்.

இந்நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீது ஏற்பட்டிருந்த அழுத்தத்தை முகாமைத்துவம் செய்ய 2020 மார்ச் மாதத்தில் முதன் முதலில் விதிக்கப்பட்ட இந்தத் தடைமூலம், மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்குத் தேவையான அந்நியச் செலாவணியை நிர்வகிப்பதற்காக இவ்வாறு அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டது. 

எவ்வாறாயினும், பொருளாதார மீட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சுற்றாடல் காரணிகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தடையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இதன்படி, 304 HS குறியீட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கான அங்கீகாரம் மூன்று கட்டங்களில் செய்யப்படும். 

• முதலாவது கட்டம் : பொதுப் பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சிறப்பு நோக்க வாகனங்கள் மற்றும் பிற இயந்திரம் சாரா வாகன உதிரிப் பாகங்களின் இறக்குமதிக்கு 2024 ஒக்டோபர் 01 முதல் அனுமதி வழங்கப்படும். 

• இரண்டாம் கட்டம் : வணிக அல்லது சரக்கு போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களின் இறக்குமதிக்கு 2024 டிசம்பர் 01 முதல் அனுமதி வழங்கப்படும். 

• மூன்றாவது கட்டம் : தனியார் பயன்பாட்டுக்கான வாகனங்கள் (மகிழுந்துகள், வேன்கள், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள் போன்றவை உட்பட) இறக்குமதிக்கு 2025 பெப்ரவரி 01 முதல் அனுமதி வழங்கப்படும். 

விதிக்கப்பட்ட தடையைப் படிப்படியாக நீக்குவது மூலம், இந்நாட்டின் வாகன தொழில்துறைக்குப் புத்துயிர் அளிப்பதோடு, பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க எதிர்பார்க்கப்படுவதோடு, பழைய வாகனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எரிபொருள் செயல்திறனின்மையைக் குறைத்தல் மற்றும் பராமரிப்புச் செலவு அதிகரிப்பைக் கட்டுப்படுத்துதல் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க இது உதவும் என்று அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இறக்குமதி கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டதன் காரணமாக, இலங்கையில் தற்போது அதிகளவான பழைய வாகனங்கள் எஞ்சியிருப்பதுடன், எரிபொருள் செயல்திறனின்மை காரணமாக வீதி பாதுகாப்பு மற்றும் அதன் மூலம் ஏற்படும் சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. 

புதிய வாகன இறக்குமதியை அனுமதிப்பதன் ஊடாகப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அரச வருமானத்தை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் வாகன இறக்குமதியானது நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அந்த நிலைமையை முகாமைத்துவம் செய்ய வாகன இறக்குமதிக்கு மேலதிக சுங்க வரி விதித்தல் போன்ற நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

இலங்கையும் கையெழுத்திட்டுள்ள பெரிஸ் சாசனத்தில் உள்ளடங்கிய ‘தேசிய ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை (NDCs)’ பூர்த்தி செய்வதற்கான தற்போதைய அர்ப்பணிப்பும், 2050 ஆம் ஆண்டுக்குள் ‘பூஜ்ஜிய உமிழ்வு நிலையை’ அடைவதற்கான தற்போதைய இலக்கும், இந்த முடிவை எடுப்பதில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

புதிய வாகன இறக்குமதிக் கொள்கையின் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, Euro 4 முதல் Euro 6 வரையிலான தரநிலைக்கு மாறுவதன் மூலம் வாயு உமிழ்வுத் தரநிலைகளுக்கு இணங்குவதும் அவசியமாகும். 

இதன் மூலம் மின்சக்தி வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

2029 ஆம் ஆண்டளவில், பெற்றோல் அல்லது டீசலில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்வது தடைசெய்து, தற்போதுள்ள வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவதும் ஊக்குவிக்கப்படும். 

இந்நாட்டில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 30,087 வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன், அவற்றைக் குறைக்கும் முயற்சியில் அரசாங்கத்தின் வாகன இறக்குமதிக் கொள்கைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உள்ளடக்கியுள்ளது. 

இந்த புதிய கட்டமைப்பின் கீழ், வாகன இறக்குமதி புதிய மாதிரிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. 

அதாவது உற்பத்தி செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குக் குறைந்த மற்றும் விளையாட்டு சார்ந்த வாகனங்கள் (SUVs) போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்குக் குறைந்த பொதுப் போக்குவரத்து மற்றும் வர்த்தக செயற்பாட்டு வாகனங்களுக்கான தடை நீக்கப்படும். 

மேலும் சிறப்புச் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் பத்து ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம்.

மேலும், இறக்குமதியாளர்கள் இந்த வாகனங்களை இறக்குமதி செய்த 90 நாட்களுக்குள் பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும் மற்றும் தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படும். 

மேலும் வாகன மற்றும் உதிரிப் பாகங்கள் இறக்குமதி செய்பவர்கள், வாகன ஒன்றிணைப்பார்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒழுங்குபடுத்துவதற்காக வருடாந்த அனுமதிப் பத்திரம் வழங்கும் முறையும் அறிமுகப்படுத்தப்படும். 

இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை அடைய வேண்டிய நிதி இலக்குகளுக்கு ஆதரவு வழங்கி, படிப்படியாக இறக்குமதியை மீண்டும் தொடங்குதல் மற்றும் சுங்க வரிமூலம் மேலதிக வருமானத்தை ஈட்டவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version