உலக அரசியல் அரங்கில் மீண்டும் ஒரு மிகப்பெரிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் பிரபலமான தலைவருமான இம்ரான் கான் சிறைச்சாலையிலேயே உயிரிழந்திருக்கலாம் என்ற செய்தி சர்வதேச ஊடகங்களில் தீயாக பரவி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அதிர்ச்சி அலையை கிளப்பிவிட்டவர் அமெரிக்காவில் வசித்து வரும் பாகிஸ்தான் மூத்த ஊடகவியலாளர் வஜாஹத் சயீத் கான் ஆவார். சிறையிலிருக்கும் இம்ரான் கானுக்கு தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வந்ததாகவும், இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து அவர் சிறைக்குள்ளேயே உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் அவர் வெளியிட்ட செய்தி ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் உலுக்கியது.
இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே மேற்கத்திய மற்றும் இந்திய ஊடகங்களில் இது முதன்மை செய்தியாக மாறி காட்டுத்தீ போல் பரவியது. உலகம் முழுவதும் உள்ள இம்ரான் கானின் ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பிற்கு உள்ளாகினர்.
நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த பாகிஸ்தான் இராணுவம் உடனடியாக களத்தில் இறங்கியது. நேற்றைய தினம் (12) அவசர அறிக்கையொன்றை வெளியிட்ட இராணுவம், இம்ரான் கான் தொடர்பான அனைத்து செய்திகளும் முற்றிலும் வதந்தியே என மறுத்துள்ளது.
ராவல்பிண்டியிலுள்ள அடியாலா (Adiala) சிறையில் இம்ரான் கான் முழு ஆரோக்கியத்துடன், நலமாக இருப்பதாக இராணுவம் உறுதியாக தெரிவித்துள்ளது. அதேநேரம், இம்ரான் கான் சிறையில் இருக்கும் சில புதிய வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


