நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் பிரதேச சபை மற்றும் மன்னார் பிரதேச சபைகளில் எருக்கலம்பிட்டி மண்ணின் இரு மைந்தர்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று, வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
புத்தளம் பிரதேச சபை, பொத்துவில்லு வட்டாரத்தில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்ற திரு லரீப் காசிம் மற்றும் மன்னார் பிரதேச சபை, எருக்கலம்பிட்டி வட்டாரத்தில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்ற முன்னாள் மன்னார் பிரதேச சபை தலைவர் திரு இஸ்மாயீல் இஸ்ஸதீன் ஆகியோரே இவ்வாறு வெற்றிபெற்றுள்ளனர்.
புத்தளம் பிரதேச சபை, பொத்துவில்லு வட்டாரத்தில் முக்கிய நான்கு கட்சிகள் போட்டியிட்ட போதிலும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய மூன்று கட்சிகளே களத்தில் பலப்பரீட்சை நடத்தின.
அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 1398 வாக்குகளையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 938 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி 690 வாக்குகளையும் பெற்றுள்ளதுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸை விட மேலதிக 460 வாக்குகளினால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பொத்துவில்லு வட்டாரத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் இதே வட்டாரத்தில் மிகவும் சொற்ப வாக்குகளினால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தோல்வியை சந்தித்திருந்தது.
இதேவேளை மன்னார் பிரதேச சபை, எருக்கலம்பிட்டி வட்டாரத்தில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்ற முன்னாள் மன்னார் பிரதேச சபை தலைவர் திரு இஸ்மாயீல் இஸ்ஸதீன் இம்முறையும் மன்னார் பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.
இத்தேர்தலில் இரண்டு பிரதேச சபைகளிலும் போட்டியிட்டு வெற்றிபெற்ற எருக்கலம்பிட்டி மைந்தர்களான திரு லரீப் காசிம் மற்றும் இஸ்மாயீல் இஸ்ஸதீன் ஆகியோர் வாக்களித்த கட்சி போராளிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
