கென்யாவில் இறைவனை சந்திப்பதற்காக பட்டினி கிடந்து உயிரிழந்தவர்கள் என சந்தேதிக்கப்படும் 47 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மத குரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெக்கன்ஸி எனும் 58 வயதான மத போதகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘நற்செய்தி சர்வதேச தேவாலயம்’ எனும் இயக்கத்தின் தலைவர் இவர்.
இயேசுவை சந்திக்கச் செல்வதற்காக பட்டினி கிடக்குமாறு தன்னைப் பின்பற்றுபவர்களிடம் மத போதகர் மெக்கன்ஸி கூறினார் என செய்தி வெளியாகியுள்ளது.
21 பேரின் சடலங்கள் காட்டுப் பகுதிகளிலிருந்து சில தினங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மேலதிக விசாரணைகள் மற்றும் தேடுதல்களையடுத்து, மேலும் 26 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என கென்யாவின் மலின்டி பிராந்திய குற்றவியல் விசாரணைப் பிரிவு தலைமை அதிகாரி சார்ள்ஸ் கெமாவ் நேற்று தெரிவித்துள்ளார்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளன.
உயிரிழந்தவர்களை கண்டுபிடிப்பதற்காக மட்டுமல்லாமல், குறித்த குழுவின் உயிர்த்தப்பிய அங்கத்தவர்களை கண்டுபிடிப்பத்றகாகவும் தேடுதல்கள் நடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இத்தேடுதல்களுக்காக 800 ஏக்கர் (325 ஹெக்டேயர்) அளவிலான காட்டுப்பகுதி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டிருந்தது.
குறித்த பகுதிக்கு நாளை செவ்வாய்க்கிழமை தான் செல்லவுள்ளதாக கென்யாவின் உள்துறை அமைச்சர் கிதுரே கின்டிக்கி தெரிவித்துள்ளார்.