இலங்கையின் முதலாவது சர்வதேச கண் சிகிச்சை மற்றும் ஒளியியல் மாநாடு (DIYATARIPPU- EYE CARE 2026) இன்று (25) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் ஆரம்பமானது.
இந்த மாநாடு கொழும்பு மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் (Monarch Imperial Hotel) இன்று முதல் நாளை (26) வரை இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
“எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பார்வை – உலகளாவிய கண் சிகிச்சையை மேம்படுத்துதல்” (Vision Beyond Borders – Advancing Global Eye Care) என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும்.
தடுக்கக்கூடிய கண் நோய்களால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அனைவருக்கும் சமமான கண் சிகிச்சையை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகத் தெரிவித்தார்.
‘தியதரிப்பு’ என்ற பெயர் இலங்கையின் 700 ஆண்டுகால வரலாற்றுப் பெருமையை பறைசாற்றுவதாகவும், இது இலங்கையின் கண் சிகிச்சைத் துறையுடன் நீண்டகாலமாகத் தொடர்புடையது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கண் என்பது மனிதனின் மிகவும் பெறுமதியான உறுப்பு என்பதால், பார்வையைப் பாதுகாப்பது என்பது ஒரு கூட்டுப் பொறுப்பாகும் என அவர் வலியுறுத்தினார்.
கண் ஆரோக்கியத்தை உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பின் (Universal Health Coverage) ஒரு அங்கமாக அரசாங்கம் கருதுகிறது.
பாடசாலை கண் பரிசோதனை திட்டங்கள், முதியோர்களுக்கான கண் சிகிச்சை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒளியியல் சேவைகளை இணைத்தல் போன்றவற்றில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும்.
மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் கண் சிகிச்சைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகளை ஒதுக்கீடு செய்தல், கண் மருத்துவர்கள் மற்றும் தாதிகளுக்கு முறையான பயிற்சி அளித்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க உள்ளது.
இந்த மாநாட்டில் மருத்துவ ஒளியியல், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான கண் சிகிச்சை, பொதுச் சுகாதாரக் கண் சேவைகள் மற்றும் நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகள் குறித்துக் கலந்துரையாடல்கள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் இடம்பெறவுள்ளன.
இந்த மாநாட்டை கண் சிகிச்சை நிறுவனம் (Eye Care Institute) மற்றும் இலங்கை கண் சிகிச்சை ஒளியியல் சங்கம் (Ceylon Eye Care Optometric Association) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இதில் கொழும்பு மேயர் வ்ராய் கலி பல்தாசர், உலக ஒளியியல் சபையின் தலைவர் கலாநிதி ரஜீவ் பிரசாத் உள்ளிட்ட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் கலந்துகொண்டனர்.




