இலங்கை சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட துணை பணிப்பாளர் (Senior Deputy Director of Customs) ஜனாப் ஷஹாப்தீன் லுக்மான் 1998 முதல் இலங்கை சுங்கத்துறையில் சிறப்பாக பணியாற்றி வருவதுடன், நாட்டின் பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
மேலும் 560 க்கும் மேற்பட்ட இருபது அடி நீளமுள்ள கண்டைனர்களில் நாட்டுக்குள் வந்த (560 TEUs) அபாயகரமான கழிவுகளை வெற்றிகரமாக திருப்பி அனுப்புவதற்கு அவர் தலைமை தாங்கியுள்ளதாகவும் ஆசிய பசுபிக் சுங்கம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இருபது அடி நீளமுள்ள 104 கண்டைனர்களில் (104 TEUs) சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பாக்குகளை பறிமுதல் செய்து மேற்பார்வையிட்டுள்ளதுடன், உள்ளூர் விவசாயத்தை வெளிநாட்டு ஆபத்தான பூச்சிகள் மற்றும் நோய்க்கிருமிகளால் ஏற்படக்கூடிய தீங்குகளிலிருந்து பாதுகாத்து சிறப்பான சேவையை வழங்கியுள்ளதாக குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை கைவைக்கப்படாத சில பகுதிகளையும் தைரியமாக விசாரணைகள் செய்துள்ளதுடன், அனுமதிக்குப் பிந்தைய தணிக்கையில் அவரது நிபுணத்துவம் மூலம் எதிர்பாராத வருவாய் இலங்கை சுங்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளள்து.
மேலும் எருக்கலம்பிட்டியை சேர்ந்த ஜனாப் ஷஹாப்தீன் லுக்மானின் முயற்சிகள், துணிச்சலாக கண்டறிதல், தொழில்முறை அணுகுமுறை, பயனுள்ள மக்கள் தொடர்பு மற்றும் விடாமுயற்சி மூலம் இலங்கையின் நலன்களைப் பாதுகாப்பதில் சுங்கத்தில் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுவதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
