இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவிப்பில், இலங்கை மின்சார சபையின் நிரந்தர ஊழியர்களுக்கு பொருந்தக்கூடிய விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டு இலக்கம் 36 இலங்கை மின்சாரச் சட்டத்தின் 18ஆம் சரத்தின் மூன்றாவது உபசரத்தின்படி இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் கீழ், நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு பின்வருமாறு:
10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவைக் காலம் கொண்ட ஊழியருக்கு, முதல் 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு 12 மாத சேவைக்கும் இரண்டு மாத சம்பளமும், மீதமுள்ள ஒவ்வொரு 12 மாத சேவைக்கும் ஒன்றரை மாத சம்பளமும் இழப்பீடாக வழங்கப்படும்.
10 ஆண்டுகளுக்கும் குறைவான சேவைக் காலம் கொண்ட ஊழியருக்கு, ஒவ்வொரு 12 மாத சேவைக்கும் 5 மாத சம்பளம் வழங்கப்படும், மீதமுள்ள சேவைக் காலத்திற்கு இழப்பீடு இல்லை.
மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான விதிமுறைகள் உள்ளிட்ட பல நிபந்தனைகள் வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.