ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள ராமோட்டின் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதுடன், குறித்த தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒரு பாதுகாப்பு அதிகாரியும் ஒரு குடிமகனும் குற்றவாளிகளை சுட்டுக் கொன்றதாக காவல்துறை உறுதிப்படுத்தியது.
குற்றவாளிகள் ஒரு வாகனத்தில் வந்து ஒரு பேருந்து நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குப் பிறகு கிழக்கு ஜெருசலேம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கு இடையிலான அனைத்து சோதனைச் சாவடிகளையும் இஸ்ரேலியப் படைகள் மூடியதாக தெரிவித்தன.
குற்றவாளிகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலிருந்து வந்ததாக காவல்துறையினர் கூறியதைத் தொடர்ந்து, இஸ்ரேலியப் படைகள் அந்தப் பிரதேசத்தில் உள்ள ஜெருசலேம் கவர்னரேட்டில் உள்ள நான்கு கிராமங்களான கட்டானா, பிட்டு, பெய்ட் இனான் மற்றும் பெய்ட் டுகு ஆகிய இடங்களில் இராணுவச் சுற்றி வளைப்பை ஏற்படுத்தி அங்கு சோதனைகளை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவ வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் பரந்த ஜெருசலேம் பகுதியில் தனது படைகளை வலுப்படுத்தியுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டில் “உடந்தையாக இருந்தவர்கள்” என்று விவரித்தவர்களைத் தேடும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜெருசலேமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். இந்தியா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கையில் உறுதியாக நிற்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு பதிலளித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இஸ்ரேலுடன் இணைந்து நின்று, நம்மை அச்சுறுத்தும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
