ஈரானின் அணுசக்தி நிலையங்களைச் அண்டிய பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் பல நடந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த நிலைமை நாள் முழுவதும் மோசமடையலாம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அதன்படி, இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் இந்த நிலைமையில் ஏற்படக்கூடிய தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க, பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, அங்கு வசிக்கும் அனைத்து இலங்கையர்களிடமும் கோரியுள்ளார்.
இதற்கிடையில், கடந்த 20ஆம் திகதி இரவு TABA எல்லை வழியாக இலங்கைக்குப் புறப்படுவதற்காக எகிப்திற்குள் நுழைந்த நான்கு இலங்கையர்களில், செல்லுபடியாகும் இஸ்ரேல் விசா இல்லாதவர்கள் சில மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
பின்னர், எகிப்தில் உள்ள இலங்கைத் தூதுவர் சிசிர செனவிரத்ன மற்றும் அவரது குழுவினர், எகிப்தின் பாதுகாப்பு மற்றும் எல்லைக் குழுக்களுடன் ஒருங்கிணைந்து, பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் அவர்கள் நேற்று (21) காலை கெய்ரோ விமான நிலையத்திற்கு வந்ததாக நிமல் பண்டார தெரிவித்தார்.
அவர்கள் இன்று காலை கெய்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குப் புறப்படவிருந்ததாக தூதுவர் கூறினார்.
மேலும், நேற்றைய தினம் இலங்கைக்குப் புறப்பட எதிர்பார்த்த மூவர் வந்துள்ளதுடன், அவர்களுக்கு தேவையான ஆவணங்களைத் தூதரகம் தயார் செய்து வழங்கியதாகவும், அவர்களும் TABA எல்லை வழியாக கெய்ரோ விமான நிலையத்திற்கு சென்று இலங்கைக்கு வரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மீள் நுழைவு விசா காலத்தை நீட்டிக்க தூதரகத்தின் உதவி
இதற்கிடையில், தற்போது இஸ்ரேலில் பணிபுரிந்து இலங்கைக்கு விடுமுறையாக வந்திருக்கும் மேலும் 119 பேர் கொண்ட குழுவொன்று இருப்பதாக தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் தங்கியிருந்த 10 பேர் மீண்டும் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.
அதன்படி, அவர்களின் மீள் நுழைவு விசா காலத்தை நீட்டிக்க PIBA நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையர்களுக்கு மட்டுமல்லாமல், ஈரான் தாக்குதல்கள் தொடங்கியதால் மீள் நுழைவு விசா காலம் முடிவடைந்த அனைத்து வெளிநாட்டவர்களும் மீண்டும் இஸ்ரேலுக்கு வருவதற்கு வசதியாக, சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடங்கியவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்
இதன்படி, இலங்கையர்களின் விசா காலத்தை நீட்டிக்க தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கைத் தூதரகம் வழங்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்திய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்தியப் பிரஜைகளை தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக, ஜோர்தானின் அம்மான் நகரிலிருந்து புது டில்லி விமான நிலையம் வரை அவ்வப்போது விமானங்களை இயக்கியுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதுவர் தெரிவித்ததாகவும், இந்த விமானப் பாதையைப் பயன்படுத்தி அம்மான் மற்றும் புது டில்லி விமான நிலையங்கள் வழியாக இலங்கைக்கு புறப்பட விரும்புவோர் தூதரகத்திற்கு வந்து பதிவு செய்யுமாறும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கை இராஜதந்திர தூதரகங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ஈரானிலிருந்தும் இஸ்ரேலிலிருந்தும் புறப்பட்ட இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இன்று (22) வெளியிட்டது.
அதன்படி, இஸ்ரேலிலிருந்து இதுவரை புறப்பட்ட மொத்த இலங்கையர்களின் எண்ணிக்கை 5 பேர் என்றும், புறப்பட காத்திருக்கும் குழு 3 பேர் என்றும் அமைச்சு தெரிவித்தது.
அதேபோல், ஈரானிலிருந்து புறப்பட்ட மொத்த இலங்கையர்களின் எண்ணிக்கை 4 பேர் என்றும், புறப்பட காத்திருக்கும் குழு 4 பேர் என்றும் அமைச்சு கூறியுள்ளது.