- வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்தானது:
- ஹொர்முஸ் ஜலசந்தி திறப்பு & எண்ணெய் விலை வீழ்ச்சி:
- லெபனானில் தொடரும் தாக்குதல்:
- இஸ்ரேல் புறக்கணிப்பு & அமெரிக்காவுடன் மோதல்:
அமெரிக்கா – ஈரான் ‘டீல்’ ஓகே! உலக சந்தையில் அதிரடி மாற்றம்; ஆனால் லெபனானில் ஓயாத போர் முரசு!
உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருந்த அந்தப் பெரும் போருக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது! ஆமாம், உலகளாவிய எரிபொருள் விநியோகப் பாதையை முடக்கி, உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைத்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளனர். எதிர்பார்த்ததை விட இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே இந்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது. இதன் நேரடி விளைவாக, சுமார் 6 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயைச் சுமந்துகொண்டு 3 சவூதி அரேபிய சூப்பர் டேங்கர் கப்பல்கள் ஹொர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) ஊடாக வியாழக்கிழமை தடையின்றிப் பயணிக்கத் தொடங்கியுள்ளன.
ஆனால், இந்த உலகளாவிய நிம்மதிப் பெருமூச்சுக்கு மத்தியிலும் ஒரு பெரிய கேள்விக்குறி லெபனானில் தொங்கிக் கொண்டிருக்கிறது!
உலகப் பொருளாதாரத்தின் இதயமாகப் பார்க்கப்படும் ஹொர்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்ட அடுத்த சில மணித்தியாலங்களில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் (Brent crude) விலை மேலும் 2 வீதத்தால் சரிந்து, பேரல் ஒன்று 78 டொலருக்கும் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது. போர் தொடங்கிய காலத்திலிருந்து பதிவான மிகக் குறைந்த விலை இதுவாகும். போர்க்காலத்தில் தங்களின் இருப்பிடத்தை மறைப்பதற்காக ரேடார் சிக்னல்களை அணைத்துவிட்டுப் பயணித்த பன்னாட்டுக் கப்பல்கள், இப்போது தங்களின் சிக்னல்களை ஒளிரவிட்டு சுதந்திரமாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா விதித்திருந்த ஈரானிய துறைமுகங்களுக்கான கடற்படை முற்றுகையும் உடனடியாக நீக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளதால், உலக வர்த்தகம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், இந்த ‘சமாதானப் புகைச்சல்’ இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கண்களைப் பழுக்க வைத்துள்ளது!
“ஈரானும் அமெரிக்கர்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள், சரி… ஆனால் லெபனானில் இன்னும் எதுவும் ஓயவில்லை!”
“பெய்ரூட்டில் கூடார அடிவாரத்தில் அமர்ந்து, தனது மொபைல் திரையில் வரும் செய்திகளை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த லெபனான் அகதி முஹம்மது டொக்மனின் ஆதங்கக் குரல் இது”
காரணம், இந்த அமைதி ஒப்பந்தத்தில் லெபனான் போரை “நிரந்தரமாக நிறுத்த வேண்டும்” என்றும், அதன் “இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும்” என்றும் அமெரிக்கா அப்பட்டமாக எழுதியுள்ளது. ஈரானின் பிரதான கோரிக்கைக்கு ட்ரம்ப் இணங்கியுள்ளதையே இது காட்டுகிறது. ஆனால், இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது! இதனால் ஆத்திரமடைந்துள்ள இஸ்ரேலிய படைகள், ஒப்பந்தம் கையெழுத்தான வியாழக்கிழமை காலையும் லெபனானின் தெற்குப் பகுதியில் கொடூர வான்வழித் தாக்குதல்களையும், எறிகணை வீச்சுகளையும் நடத்தியுள்ளன. பெய்ரூட் நகரின் வான்பரப்பில் இஸ்ரேலிய உளவு ட்ரோன்கள் இப்போதும் வட்டமிட்டுக் கொண்டிருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
நெருங்கிய நண்பர்களாக இருந்த ட்ரம்பிற்கும் நெதன்யாகுவிற்கும் இடையே இப்போது உருவாகியுள்ள இந்த விரிசல், வரலாற்றில் இல்லாத ஒரு பெரும் இராஜதந்திர மோதலாக வெடித்துள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள லிடானி ஆற்றின் தெற்குப் பகுதியை ஒரு பாதுகாப்பு வலயமாக மாற்றி, அங்கு தனது இராணுவத்தை தொடர்ந்து தக்கவைக்க இஸ்ரேல் ஒற்றைக்காலில் நிற்கிறது. இது தொடர்பாக வாஷிங்டனுடன் இஸ்ரேல் “பிடிவாதமான பேச்சுவார்த்தையில்” ஈடுபட்டுள்ளதாக நெதன்யாகுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலை மிரட்டிப் பணிய வைப்பாரா அல்லது நெதன்யாகுவின் பிடிவாதத்திற்கு இடம் கொடுப்பாரா என்பதில் தான் லெபனானின் அமைதி தங்கியுள்ளது.
“இஸ்ரேல் இப்போது ஒரு இக்கட்டான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது: ஒன்று இராணுவ அழுத்தத்தைத் தொடர்ந்து பிரயோகித்து ட்ரம்பின் இராஜதந்திர ஆதரவை இழப்பது, அல்லது ட்ரம்பின் குட்-புக்கில் நீடிப்பதற்காகப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது” என இஸ்ரேலிய ஊடகங்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளன. இறுதி உடன்படிக்கைக்கான 60 நாள் காலக்கெடு ஓடத் தொடங்கிவிட்ட நிலையில், லெபனான் மக்களின் நிம்மதி இன்னும் சில நாட்களுக்குத் தத்தளிப்பில் தான் இருக்கப் போகிறதா?



