ஹிஜ்ரி 1447 வாழ்த்துச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்
“நாம் அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு,எல்லா வாய்ப்புகளையும் நன்றாகப் பயன்படுத்தி, ஒற்றுமைக்காகப் பாடுபடுவதோடு,பிறந்துள்ள இஸ்லாமியப் புத்தாண்டில் உலகில் நிலையான சமாதானம் ஏற்பட இறைவனைப் பிரார்திப்போமாக” என ஹிஜ்ரி 1447 ஆவது இஸ்லாமிய புத்தாண்டையிட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பல பிரதேசங்களில் முஹர்ரம் தலைப் பிறை தென்பட்டதாக இன்றிரவு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள இஸ்லாமியப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளளதாவது,
மக்கமாநகரில் இஸ்லாத்தின் எதிரிகளின் தொல்லைகள் அதிகரித்த போது, இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் சஹாபாக்களுடன் அங்கிருந்து வெளியேறி, மதீனாவுக்கு இடம்பெயர்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தை அடியொட்டியே இஸ்லாத்தில் ஹிஜ்ரி ஆண்டுக் கணிப்பு மேற்கொள்ளப் பட்டிருக்கின்றது.
மத்திய கிழக்கில் பலஸ்தீனத்தில் சில வல்லரசுகளின் ஒத்துழைப்புடன், இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப் படுகொலைகளுக்கு மத்தியிலும், ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் ஒரு தலைப் பட்சமாகத் தொடுத்த பலத்த தாக்குதலுக்கு மத்தியிலும் இன்னொரு இஸ்லாமியப் புத்தாண்டை உலக முஸ்லிம்கள் சந்திக்கின்றனர்.
இவ்வாறு,முதல் மாதம் முஹர்ரம் தலைப்பிறையோடு நாம் ஒரு புதிய இஸ்லாமிய ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சந்தர்ப்பத்தில், அல்லாஹ் நம்மனைவருக்கும் சிறந்த வழிகாட்டுதல்களையும், பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், சமாதானத்தையும்,நீதியின் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் ஆற்றலையும் வழங்கி அருள்வானாக .
Rauf Hakeem, MP.
Leader,Sri Lanka Muslim Congress.