இஸ்ரேல், ஈரான் போர் உலகின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ள நிலையில் மறுபுறம் காஸா மக்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
உணவுக்காக தவித்துக்கொண்டிருக்கும் அப்பாவி காஸா மக்கள் மீது தினமும் இஸ்ரேல் வன்முறைகளில் ஈடுபட்டு கொலைசெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான உதவிகளுக்காக காத்திருந்த அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் சுமார் 50 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரப் பணியாளர்கள் தெரிவித்துள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
காசாவில் மனிதாபிமான உதவிகள் இடம்பெறும் மையங்களுக்கு அருகில் நேற்று அதிகாலை முதல் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், ஏனைய பகுதிகளில் 21 பேர் கொல்லப்பட்டதாகவும் காசா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய காசாவில் சலா அல்-தின் தெருவில் நடந்த ஒரு சம்பவத்தில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 62 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேலிடையே கட்டாய போர் நிறுத்தம் பற்றி பேசிவரும் சில மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்கா, காஸா போர் நிறுத்தம் பற்றி எதுவும் வாய் திறக்காமல் இருப்பது ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
