அமெரிக்காவை தளமாகக் கொண்ட Foreign Affairs இதழில் வெளியிட்டுள்ள முக்கிய கட்டுரை ஒன்றில், ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜாவத் ஸாரீஃப் (Javad Zarif) தனது நாட்டிற்கு அதிரடியான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் தனது வெற்றியைப் பிரகடனப்படுத்தி, தற்போதைய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், அடுத்த மோதலைத் தடுக்கும் வகையிலான உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரைத் தமக்குச் சாதகமான முறையில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வரைபடத்தை அவர் விளக்கியுள்ளார்.
இதன்படி ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க முன்வர வேண்டும் எனவும் அனைத்துத் தடைகளையும் நீக்குவதற்குப் பதிலாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஈரானும் அமெரிக்காவும் எதிர்காலத்தில் ஒருவரை ஒருவர் தாக்க மாட்டோம் என உறுதியளிக்கும் வகையில் ‘பரஸ்பர ஆக்கிரமிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தத்தை’ ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்காவுடன் பொருளாதார ரீதியான தொடர்புகளை ஏற்படுத்த முன்வர வேண்டும் எனவும் இது இரு நாட்டு மக்களுக்கும் நன்மையை அளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டால், ஈரான் தனது கவனத்தை வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதிலிருந்து மாற்றி, உள்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் செலுத்த முடியும் என ஸாரீஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் ஈரானியர்கள் தகுதியான ஒரு பிரகாசமான எதிர்காலத்தைப் பெற முடியும் எனவும் அவர் அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


