துபாயில் அமைந்துள்ள உக்ரைன் நாட்டின் ட்ரோன்-எதிர்ப்பு அமைப்புகளின் கிடங்கை தாக்கி அழித்ததாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீர் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்கப் படைகளின் மறைவிடமாக செயல்பட்ட உக்ரைன் கிடங்கை தாக்கியதாக ஈரான் கூறியுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) மற்றும் அதன் கூட்டு செயல்பாட்டு மையமான காத்தம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) மார்ச் 28, 2026 அன்று ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
அதில், துபாயில் அமெரிக்க இராணுவத் தளபதிகள் மற்றும் வீரர்கள் பதுங்கியிருந்த இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறியது. அதே நேரத்தில், அமெரிக்கப் படைகளுக்கு உதவும் நோக்கில் துபாயில் அமைக்கப்பட்டிருந்த உக்ரைனிய ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளின் (Anti-drone systems) கிடங்கை தாக்கி அழித்ததாகவும் தெரிவித்தது.
இந்தத் தாக்குதலின் போது அங்கு 21 உக்ரைனிய நிபுணர்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஈரான் தரப்பில் உரிமை கோரப்பட்டது.
இந் நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பை உக்ரைன் அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. இது குறித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹியோர்ஹி திகி மற்றும் உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது:
ஈரானின் இந்தச் செய்தி “முற்றிலும் பொயானது” என்றும், இது ஈரானிய மற்றும் ரஷ்ய அரசுகளின் திட்டமிடப்பட்ட தவறான தகவல் பரப்புதல் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அமீரகத்தில் உக்ரைனிய நிபுணர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
சர்வதேச செய்தி நிறுவனங்கள் ஈரானின் உரிமை கோரலைப் பதிவு செய்துள்ளனரே தவிர, உக்ரைன் கிடங்கு உண்மையில் அழிக்கப்பட்டதற்கான எவ்வித செயற்கைக்கோள் படங்களோ அல்லது தரைமட்ட ஆதாரங்களோ இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
ஈரான் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறினாலும், உக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத் தரப்பிலிருந்து இதற்கு எவ்வித அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


