சாகாமல் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். இது தொடர்பான ஆய்வுகளும் கூட உலகெங்கும் நடந்தே வருகிறது.. இதற்கிடையே பிரபல ஐரோப்பிய நிறுவனம் ஒன்று, எதிர்காலத்தில் உயிரிழந்தோரை மீண்டும் உயிருடன் கொண்டு வர புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாழ்வில் பிறப்பு என்று ஒன்று இருந்தால் நிச்சயம் இறப்பு இருக்கும். ஆனால், இந்த இயற்கை விதியை மாற்றவே உலகெங்கும் ஆய்வுகள் நடந்து வருகிறது. இதுவரை உயிரிழந்தோரை வெற்றிகரமாக மீட்க முடியவில்லை என்றாலும் கூட இது குறித்த ஆய்வுகள் தொடர்ந்தே வருகிறது. இதற்கிடையே ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான டுமாரோ பயோ வினோதமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஒருவர் உயிரிழந்த பிறகு அவர்களின் உடல்களைப் பாதுகாப்பதாக அறிவித்துள்ளனர். எதிர்காலத்தில் மனித அறிவியல் வளர்ச்சியால் உயிரிழந்தோரை மீண்டும் உயிருடன் கொண்டு வர முடிந்தால் இது அவர்கள் மீண்டும் உயிர் பெற வாய்ப்பு தருவதாக இருக்கும். இதன் கட்டணம் கொஞ்சம் அதிகம் தான். இதற்காக $200,000 (ரூ.1.74 கோடி) கட்டணமாக வசூலிக்கப் போகிறார்களாம்.
உயிரிழந்தோர் உடலை மிகக் குறைந்த வெப்பநிலைக்கு விரைவாகக் குளிர்விப்பதன் மூலம் முழு உடல் கிரையோப்ரிசர்வேஷனை வழங்குகிறது. இது செல் சேதம் மற்றும் சிதைவைத் தடுக்க உதவுகிறது. எப்போதும் உடலைச் சேமிக்க நேரம் மிக முக்கியமானது. கொஞ்சம் லேட் ஆனாலும் உடலைப் பாதுகாக்க முடியாமல் போய்விடும். இதனால் சட்டப்பூர்வ மரணத்திற்குப் பிறகு உடனடியாக செயல்முறையைத் தொடங்குவதே டுமாரோ பயோவின் திட்டம். இதற்காக 24X7 செயல்படும் அவசர காத்திருப்பு குழுவையும் வைத்திருக்கிறார்கள். எதிர்கால மருத்துவ வளர்ச்சியால் ஒரு நாள் இந்த உடல்களுக்கு மீண்டும் உயிர் தர முடியும் என்பதே இவர்கள் நம்பிக்கை.

இதெல்லாம் யார் செய்வார்கள். அதுவும் கட்டணம் இவ்வளவு அதிகமா இருக்கு என நீங்கள் கேட்கலாம். உண்மையில் அந்த ஊரில் இதற்கு மவுஸ் அதிகமாகவே இருக்கிறது. இதுவரை, 650க்கும் மேற்பட்டோர் இந்த சேவைக்குப் பதிவுசெய்துள்ளனர். மரணத்தில் இருந்து சயின்ஸ் தங்களைக் காக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உடலைப் பாதுகாக்க முடிவெடுத்துள்ளனர். ஐரோப்பாவில் இதுபோன்ற சேவையை வழங்கும் முதல் நிறுவனம் டுமாரோ பயோ ஆகும். இதுவரை அந்த நிறுவனம் 3 அல்லது 4 பேரின் உடல்களைப் பராமரித்து வருகிறதாம். மேலும், 5 செல்ல பிராணிகளின் உடல்களையும் பராமரித்து வருகிறதாம். 700க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ள நிலையில், வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் உயரவே கூடும். மேலும், விரைவில் அமெரிக்காவிலும் இந்த சேவையை அறிமுகப்படுத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதுவரை கிரையோபிரசர்வேஷனுக்குப் பிறகு யாரும் வெற்றிகரமாக உயிர் பெறவில்லை.. ஒருவேலை அவர்கள் உயிர் பெற்றாலும் கூட, அவர்களுக்கு மூளை கடுமையாகச் சேதமடைந்தே இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மனிதர்களைப் போன்ற சிக்கலான மூளை அமைப்புகளைக் கொண்ட உயிரினங்களை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியும் என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை என்பதால் சிலர் இதை “அபத்தமானது” என்றும் சாடுகிறார்கள். அம்பலப்படுத்துகிறது என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் நரம்பியல் பேராசிரியர் கிளைவ் கோயன் கூறுகிறார்.