‘உலகின் தெற்கு நாடுகளின் குரல்’ மாநாட்டின் அரச தலைவர்கள் அமர்வில் நேற்று (17) அனுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் இருந்து இணையவழி மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.
“நிலைபேறான எதிர்காலத்திற்கான வலுவூட்டப்பட்ட உலகின் தெற்கு நாடுகள்” என்ற தொனிப்பொருளின் கீழ் மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த மாநாடு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மற்றும் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
வங்காள விரிகுடா மற்றும் அதைச் சூழ உள்ள பிராந்தியங்கள் தற்போது அபிவிருத்தி மையமாக மாறி வருவதால், பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கையானது இந்தியாவுடன் நெருக்கமான பொருளாதார ஒருங்கிணைப்புடனும், ஜப்பான் முதல் இந்தியா வரை பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
உலகளாவிய தலைமைத்துவத்தில் மேற்கிற்கு இனிமேலும் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையை அடைந்துள்ளதாகவும், இவ்வாறான நிலையில், உலகின் தெற்கு நாடுகளை வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளுக்கு இதன்போது ஜனாதிபதி பாராட்டினார்.
உலகின் தெற்கு நாடுகள் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்கள் தொடர்பில் பொதுவான ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு ‘உலகின் தெற்கு நாடுகளின் குரல்’ மாநாடு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்திய – இலங்கை உறவு குறித்து இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ‘நோக்கு’ பிரகடனம் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ஒத்துழைப்பை நினைவுபடுத்துவதுடன் எதிர்காலத்தில் நெருக்கமான உறவுகளுக்கு வழி வகுக்கும் என்றும் இது இறுதியில் பல்வேறு துறைகளின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், இந்தியப் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவின் பெருந்தன்மையால் இலங்கை மக்கள் இரண்டு வருடங்களாக எதிர்கொண்ட சிரமங்களைக் குறைத்து வங்குரோத்து நிலையிலிருந்து மீள முடிந்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அதற்காக நன்றிகளைத் கூறினார்.
‘உலகின் தெற்கு நாடுகளின் குரல்’ தொடர்பான மூன்றாவது இணையவழி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளமைக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இந்தத் தொடர் உச்சி மாநாடு எமது நோக்கங்கள் குறித்த புரிதல்கள் மற்றும் ஒவ்வொருக்கு இடையிலான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.