ஜனவரி 01 முதல் பிரித்தானியாவுக்கான இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கு வரிச்சலுகையுடன் கூடிய அனுமதி தொடர்பான அறிவித்தலொன்றை பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவின் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் (DCTS) சீர்திருத்தங்கள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதுடன், தாராளமயமாக்கப்பட்ட வர்த்தக விதிகள் 2026 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் வகையில், பிரித்தானியாவுக்கான இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கு வரிச்சலுகையுடன் கூடிய அனுமதி தொடர்பான அறிவித்தலொன்றை பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் நேற்று (08) வெளியிட்டுள்ளது.
அதன்படி, உற்பத்தியாளர்கள் தற்போது 100% வரையிலான மூலப்பொருட்களை உலகளாவிய ரீதியில் பெற்றுக்கொள்ள முடிவதுடன், பிரித்தானியாவிற்கான பூச்சிய வரிச் சலுகையையும் (Zero Tariffs) தொடர்ந்து பேண முடியும் என்றும், புதிய ஏற்பாடுகளின் கீழ் இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கான ஆடை ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தாராளமயமாக்கப்பட்ட வர்த்தக விதிகளின் கீழ், இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் பிரித்தானிய சந்தைகளில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையிலான அணுகலைப் பெறுகின்றனர். இந்த மாற்றங்கள், உற்பத்தியாளர்கள் ஆடைகளுக்கான மூலப்பொருட்களை உலகின் எந்தவொரு நாட்டிலிருந்தும் 100% வரை பெற்றுக்கொள்வதற்கும், தேவேளை பிரித்தானிய சந்தைக்கான வரிச்சலுகை அனுமதியைத் தொடர்ந்து பேணுவதற்கும் வழிவகுக்கின்றன.
இரண்டு குறிப்பிடத்தக்க உற்பத்திச் செயல்முறைகள் இலங்கையிலேயே நடைபெற வேண்டும் என்ற முந்தைய விதியை நீக்கி, தற்பொழுது குறைவான செயலாக்கத் தேவைகளே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
தாராளமயமாக்கப்பட்ட இந்த விதிகள், இலங்கையின் ஏனைய அனைத்து ஏற்றுமதிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் 18 நாடுகளைக் கொண்ட ஆசிய பிராந்தியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதையும் உள்ளடக்கியுள்ளன.
இது இலங்கை உற்பத்தியாளர்கள் பிராந்தியக் கூட்டாண்மை நாடுகளிலிருந்து மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கும், அதேவேளையில் முன்னுரிமை வரிச் சலுகைகளைத் தொடர்ந்து பேணுவதற்கும் வழிவகுக்கின்றது என்றும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


